டொலர் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டே 1700 ரூபா சம்பள அதிகரிப்பு நிர்ணயிக்கப்பட்டது – செந்தில் தொண்டமான்

பெருந்தோட்ட நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து உழைக்கும் டொலர் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு நிர்ணயிக்கப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார்.

சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் இறக்குவானை பகுதியில் இன்று (02) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பெருந்தோட்;ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1000 ரூபாவாக காணப்பட்ட தருணத்தில், பெருந்தோட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு சுமார் 5 டொலர் சம்பளமே வழங்கியதாக அவர் கூறினார்.

இதன்படி, தற்போது அதே 5 டொலர் சம்பள அதிகரிப்புடன் மேலும் ஒரு தொகையை இணைத்து 1700 ரூபா நாளாந்த சம்பளத்திற்கான இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக செந்தில் தொண்டமான் குறிப்பிடுகின்றார்.

இந்த 1700 ரூபா சம்பள அதிகரிப்பு இந்த மாதத்துடன் நடைமுறைக்கு வரும் என அவர் உறுதியளித்தார்.

அத்துடன், சம்பள அதிகரிப்பு தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பை பெருந்தோட்ட நிறுவனங்களின் ஊடாகவே வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் குறிப்பிடுகின்றார்.

சம்பள அதிகரிப்புக்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்திய நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கை காரணமாகவே 1700 ரூபா சம்பள அதிகரிப்புக்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு வழங்கப்படாத பட்சத்தில், தோட்ட நிர்வாகத்தை அரசாங்கம் பொறுப்பேற்கும் என ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பே, பெருந்தோட்ட நிறுவனங்கள் 1700 ரூபா சம்பள அதிகரிப்புக்கு இணக்கம் தெரிவிக்க காரணம் என அவர் கூறுகின்றார்.

அத்துடன், பெருந்தோட்ட நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலுள்ள லயின் அறைகளை அரசாங்கம் முழுமையாக பொறுப்பேற்று, அதனை கிராமங்களாக மாற்றும் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் மாத்திரமே முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதி செய்வதன் ஊடாக, மலையக மக்களின் எதிர்கால வாழ்வாதார வாழ்க்கையின் வெற்றியை உறுதிப்படுத்த முடியும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார்.

Related Articles

Latest Articles