‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்குப் பிறகு பா.ரஞ்சித்தும், ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குப் பிறகு விக்ரமும் இணைந்துள்ள படம் ‘தங்கலான்’. இரண்டு பேருக்குமே ஒரு பேர் சொல்லும் வெற்றி அவசியமாக இருந்த நிலையில், விக்ரமின் கெட்டப், ஜி.வி.பிரகாஷின் பாடல்கள், விறுவிறுப்பான ட்ரெய்லர் என இப்படத்துக்கான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியிருந்தது. நீண்ட நாட்களாக இறுதிகட்ட பணிகளில் இருந்த ‘தங்கலான்’ ஒருவழியாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கதை 19-ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது. வட ஆற்காட்டில் பண்டைய அரசர்கள் பிடுங்கிக் கொண்ட நிலங்களில் இருந்து எஞ்சிய இடத்தில் விவசாயம் செய்து வரும் ஒரு சிறிய பூர்வக்குடி இனக்குழுவின் தலைவன் தங்கலான் (விக்ரன்). மனைவி கங்கம்மாள் (பார்வதி), குழந்தைகள் என வாழ்ந்து வரும் தங்கலான், பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக இப்போதைய கோலார் பகுதியில் தன்னுடைய மூதாதையர்கள் தங்கம் எடுத்துக் கொண்டிருந்ததையும், சிற்றரசன் ஒருவனின் பேராசையால் அவர்கள் தூண்டப்பட்டு, அப்பகுதியின் காவல் தேவதையாக விளங்கும் ஆரத்தி (மாளவிகா மோகனன்) என்ற பெண்ணால் தடுக்கப்பட்டதையும் கதையாக தன் குழந்தைகளுக்கு சொல்கிறார்.
இன்னொருபுறம் ஜமீன்தார் ஒருவரால் எஞ்சியிருக்கும் நிலமும் அபகரிக்கப்பட்ட நிலையில், தங்கலானின் குழுவினருக்கு உதவ முன்வருகிறார் க்ளெமென்ட் என்ற வெள்ளைக்காரர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தங்கலானின் மூதாதையர்கள் எடுத்த அதே பகுதியில் தனக்கு தங்கத்தை எடுத்துக் கொடுத்தால், அதில் பங்கு தருவதாக உறுதியளிக்கிறார். இதற்கு ஒப்புக் கொள்ளும் தன்னுடைய கூட்டத்தில் இருந்த சிலரை அழைத்துக் கொண்டு அந்த வெள்ளைக்காரர்களுடன் புறப்படுகிறார். செல்லும் வழியில் அவர்களுக்கு ஏற்படும் இடையூறுகள் என்னென்ன? அவர்களுக்கு தங்கம் கிடைத்ததா என்பதே படத்தின் திரைக்கதை.
தலித் பூர்வக்குடி மக்களின் ரத்தத்திலும் வியர்வையிலும் உருவான கோலார் தங்க வயலின் மறைக்கப்பட்ட வரலாற்றை தொன்மக் கதைகள் வழியே கற்பனை கலந்த ஒரு ஃபேன்டசி படைப்பாக கொடுத்துள்ளார் பா.ரஞ்சித். சாதிய ஒடுக்குமுறையையும், நில அரசியலையும் ரஞ்சித்தின் முந்தைய படங்களை விட ‘தங்கலான்’ ஒருபடி மேலே சென்று மிக அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறது.
வரலாற்றின் பக்கங்களில் இருந்து பவுத்தம் மெல்ல அழிக்கப்பட்டது, அரசர்களுக்கு பின்னால் வந்த ஜமீன்தார்கள் நிலங்களை வஞ்சித்து பிடுங்கியது, தாய் வழிச் சமூகங்கள் பற்றிய குறியீடுகள் கதையின் ஓர் அங்கமாய் தங்கலானின் பயணத்தினூடே வழிநெடுக வந்துகொண்டிருக்கின்றன. முதல் பாதி முழுவதும் ரஞ்சித்தின் நேர்த்தியான திரை மொழி வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது,
ஆனால், படத்தின் மிகப் பெரிய பிரச்சினை இரண்டாம் பாதியில் இருந்துதான் தொடங்குகிறது. வெள்ளைக்காரர்களுடன் சேர்ந்து தங்க வேட்டைக்கு புறப்படுவது வரை சுவாரஸ்யமாக செல்லும் படம், அதன் பிறகு தங்கலானின் பயணம் தொடங்கிய பிறகு ஒரு சுழலில் சிக்கிக் கொண்டதைப் போல திரும்ப திரும்ப திரும்ப, எத்தனை முறை என்றே கணிக்க முடியாத அளவுக்கு, காட்சிகள் ரிப்பீட் ஆகிக் கொண்டே இருக்கின்றன.
நடிப்பில் விக்ரம் அசாத்திய உழைப்பைக் கொட்டியிருக்கிறார். அர்ப்பணிப்பு என்ற வார்த்தை கூட குறைவுதான். அந்த அளவுக்கு அபாரமான உடல்மொழியும், உழைப்பும் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பெரும் பாய்ச்சல். அவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் அதகளம் செய்திருக்கிறார் பார்வதி. முரட்டுத்தனம் கொண்ட தங்கலானையே மிரட்டும் கங்கம்மா தமிழின் மறக்கமுடியாத பெண் கதாபாத்திரமாக பேசப்படும். பசுபதி, மாளவிகா மோகனன் என அனைவரும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
படத்தின் இன்னொரு ஹீரோ என்றால் அது சந்தேகமே இன்றி ஜி.வி.பிரகாஷ்தான். படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை மிரட்டியிருக்கிறார். பாடல்கள், பின்னணி இசை இரண்டுமே படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது. சலிப்படையச் செய்யும் பல காட்சிகளில் படத்தை காப்பாற்றுவது ஜி.வி.யின் பின்னணி இசைதான். படத்தின் மற்றொரு பலம், கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு, தங்க வயல், பூர்வக்குடிகளின் வறண்ட பூமி, என ‘ரா’வாக காட்சிப்படுத்தி ஸ்கோர் செய்துள்ளார்.
கலை இயக்கம், ஸ்டன்ட் உள்ளிட்ட அம்சங்களில் படக்குழுவின் அசாத்திய உழைப்பு தெரிகிறது. உதாரணமாக, படத்தின் ஆரம்பத்தில் விக்ரம் – மாளவிகா மோகனன் மோதும் காட்சி சிலிர்ப்பனுபவம்.
இரண்டாம் பாதியில் தங்கத்தை எடுக்க முயற்சிப்பது, அதனை மாளவிகா மோகனன் தடுக்க முயல்வது, இவை ஏன் திரும்ப திரும்ப வந்து கொண்டே இருக்கின்றன என்று தெரியவில்லை. காட்சிகள் ஒரு முடிவே இல்லாமல் இலக்கின்றி நகர்வது கடும் சலிப்பை தருகிறது. க்ளைமாக்ஸ் இப்போது வரும், இதோ வந்துவிட்டது, இதுதான் க்ளைமாக்ஸ் என ஒவ்வொரு காட்சியிலும் யோசிக்க வேண்டியிருக்கிறது. அந்த அளவுக்கு இழுத்துக் கொண்டே சென்றிருக்க தேவையில்லை.
க்ளைமாக்ஸ் கடைசி 15 நிமிடங்கள் அபாரமாக படமாக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு முந்தையக் காட்சிகள் ஏற்படுத்திய சலிப்பால் அது முற்றிலுமாக எடுபடாமல் போவதை தவிர்க்க முடியவில்லை.
யாரும் இதுவரை பேசத் துணியாத ஒரு வரலாற்றை எடுத்துக் கொண்டு, அதில் தொன்மம், வாய்வழிக் கதைகள் அடிப்படையிலே ஃபேன்டசியாக கொடுக்க முயன்றிருக்கிறது படக்குழு. முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யம் இரண்டாம் பாதியிலும் இருந்திருந்தால் தமிழின் தவிர்க்க முடியாத ஒரு கிளாசிக் படைப்பாக ஆகியிருக்கும் இந்த ‘தங்கலான்’.