ஓமான் நாட்டிலிருந்து இலங்கை திரும்பிய 25 பயணிகளை யாழ். விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு, ஏற்றிவந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியுள்ளது.
கிளிநொச்சி பளை – ஆனைவிழுந்தான் பகுதியிலேயே இன்று காலை 9.45 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி நீர் விநியோக குழாய் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்துள்ள 3 பேர் உடனடியாக அம்புலன்ஸ் வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். ஏனையோர் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓமான் நாட்டிலிருந்து நாடு திரும்விய 254 பேர் தனிமைப்படுத்தலுக்காக விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு 11 பேருந்துகளில் அழைத்துவரப்பட்ட நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.