இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடி நிலையில் தமிழ் மக்கள் மட்டுமன்றி ஏனையவர்களும் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு பிரவேசிப்பதற்கு முயற்சித்து வருவதாகவும் அதனைத் தடுக்கும் வகையில் இந்திய கடற்பரப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அதனையடுத்து இந்திய கடல் பகுதியிலும் கடற்கரை பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் நிலவும் நெருக்கடிநிலை காரணமாக தமிழ்மக்கள் மட்டுமன்றி சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களும் இந்தியாவுக்குள் பிரவேசிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகவும் அதேவேளை சிறைச்சாலையிலிருந்து தப்பிச்சென்றுள்ள சிறைக்கைதிகளும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக மேற்படி வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட மோதல் சம்பவங்களின் போது வட்டரக்க சிறைச்சாலையிலிருந்து தப்பிச்சென்றுள்ள 50 சிறைக்கைதிகள் பாதுகாப்பு படையினரிடமிருந்து தப்புவதற்காக இந்தியாவுக்குள் பிரவேசிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதற்கிணங்க தமிழ்நாட்டின் கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் மீன்பிடி படகுகள் தரித்து நிற்கும் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன்சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ்நாடு பொலிஸார் தெரிவித்தனர்.
அவ்வாறு தமிழ்நாட்டுக்கு வரமுயற்சிப்போரில் தடைசெய்யப்பட்டுள்ள எல்.ரி.ரி.ஈ முன்னாள் உறுப்பினர்களும் வருவதற்கு வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அத்துடன் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவோரும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துவருவதாகவும் தமிழ்நாட்டு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்