தமிழரசுக் கட்சியுடன் இணைந்து பயணிக்குமா ‘சங்கு’ கூட்டணி?

ஒன்றாக இணைந்து பயணிப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியிடம் இருந்து சாதகமான பதில்கள் கிடைக்குமானால் அது தொடர்பில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி கலந்துரையாடி முடிவெடுக்கும் என்று  அந்தக் கட்சியின் இணைத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கு ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் தமது விருப்பத்தைத் தெரிவித்து சி.வி.கே.சிவஞானம் அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் இந்தக் கடிதத்தைத் தர்மலிங்கம் சித்தார்த்தன் அனுப்பியுள்ளார்.

இன நலன் குறித்து கட்டியெழுப்பப்பட வேண்டிய ஒற்றுமை பற்றி தெரிவித்துள்ள விடயங்களில் எக்காலத்திலும் தாங்கள் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருப்பவர்கள் அல்ல எனச் சித்தார்த்தன் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

”உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சில இடங்களிலாவது ஒன்றாகப் போட்டியிடுவது பற்றி ஆராய விரும்பும் நீங்கள், தற்போது நாம் அமைத்துள்ள கூட்டணி உங்களுக்கு ஏமாற்றத்தையும் கவலையையும் அளிப்பதாகவும், உங்கள் கட்சிக்குத் தனித்துப் போட்டியிடும் சூழலை உருவாக்கியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபட்டு தேர்தல்களைச் சந்திக்கும் நிலை கடந்த 2023ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிப்பை அடுத்தே ஏற்பட்டது.

தனித்துப் போட்டியிட்டு பின்னர் இணைந்து ஆட்சி அமைக்கும் எண்ணக்கருவை தங்களது மத்திய குழு மட்டக்களப்பில் கூடி எடுத்தீர்கள். இதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு தமிழரசுக் கட்சி வெளியேறியது.

பிரிந்து நின்று செயற்படுவதால் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய பாதகமான விளைவுகளை ஆணித்தரமாக நாம் முன்வைத்தபோதும் தமிழரசுக் கட்சியின் செயல் தலைவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மறைந்த சம்பந்தன் அண்ணரிடம் எமது நிலைப்பாட்டை நாம் நேரடியாக முன்வைத்தபோதும் கூட அவரும் தமிழரசுக் கட்சியின் முடிவை ஏற்று செயற்படுமாறு எம்மை அறிவுறுத்தினார்.

அன்று கூட்டமைப்பிலிருந்து தமிழரசுக் கட்சி வெளியேறிய பின்னர் நாமும் ரெலோ அமைப்பும் இயன்ற வரையிலும் ஏனைய தமிழ் அமைப்புகளை ஐக்கியப்படுத்தி கூட்டமைப்பாகச் செயற்படும் நோக்கில் மேலும் மூன்று அரசியல் கட்சிகளை இணைத்து கூட்டமைப்பாக பயணிக்கத் தொடங்கினோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் அதன் அங்கத்துக் கட்சிகளினதும் தொடர்ச்சியான பிளவுகளினால் ஏற்பட்ட மோசமான விளைவுகளைக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்க் கட்சிகளும் தமிழ் மக்களும் ஆழமாக உணர்ந்து கொண்டோம்.

மேலும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்து கட்சிகளாக இணைந்து ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியாகப் போட்டியிட்ட நாம், நடைபெற இருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியத்தின் இருப்புக்கு மிகவும் அவசியமான ஒற்றுமை எனும் விடயத்தை மேலும் வலுவானதாக்க சாத்தியமான வகையில் மேலும் சில அமைப்புகளை இணைத்துப் பயணிக்கத் தீர்மானித்து தொடர்ச்சியாக மேற்கொண்ட செயற்பாடுகளின் பலனாகவே இன்று பல கட்சிகள் இணைந்த கூட்டணியொன்றை உருவாக்க முடிந்துள்ளது.

நீங்கள் விரும்புவது போல், தமிழரசுக் கட்சியுடன் இந்தக் கூட்டணியும் இணைந்து செயற்படுவதன் மூலம் தமிழ்த் தேசியத்துக்கு மேலும் வலுச்சேர்க்க வேண்டும் என்பதில் நாமும் பெரு விருப்பம் கொண்டுள்ளோம்.

எனவே, எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் சம்பந்தமாக நடைமுறைச் சாத்தியமான வகையில் எமது கூட்டணியுடன் பேச்சுக்களை நடத்தக்கூடிய தீர்மானம் ஒன்றை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு மேற்கொண்டு அறியத் தருவீர்களானால் அது பற்றி ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுவில் பேசி சாதகமான பதிலை தங்களுக்கு அறியத் தர முடியும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles