‘தமிழருக்கு தீர்வை தாருங்கள் – நாட்டை இளைஞர்களிடம் ஒப்படையுங்கள்’

“தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படைப் பிரச்சினைகளுக்கும், நீண்ட காலக் கோரிக்கைகளுக்கும் நிலையான தீர்வை அரசு வழங்க வேண்டும்” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய சாணக்கியன் எம்.பி.,

“இளம் தரப்பினர் கிரிக்கெட் விளையாட்டை சிறந்த முறையில் முன்னோக்கிக் கொண்டு செல்கின்றார்கள். ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணிக்கு வாழ்த்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அதேவேளை, அரசியலையும் இளம் தரப்பினரிடம் ஒப்படைக்குமாறு நாட்டு மக்களிடம் மீண்டும் வலியுறுத்துகின்றேன்.

மந்த போசணை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 வயதுக்குக் குறைவான 55 ஆயிரம் பிள்ளைகள் உள்ளார்கள். இந்த எண்ணிக்கையில் 10 சதவீதமானோர் மந்தபோசணை அல்லது ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வைத்திய அதிகாரிகள் அறிக்கையிட்டுள்ளனர்.

அதற்கு மேலதிகமாக 11 ஆயிரம் கர்ப்பிணித் தாய்மார்கள் உள்ளார்கள். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நூற்றுக்கு 10 சதவீதமாகக் காணப்பட்ட மந்த போசணை அல்லது ஊட்டச்சத்து குறைபாடு 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமளவில் 17 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

எமது மாவட்டத்தைப் பொறுத்தவரை கர்ப்பிணித் தாய்மாரின் உரிய காலத்துக்குத் தேவையான நிறை குறைவடைந்துள்ளது என மாவட்ட சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போசணை குறைபாடு உள்ள பிள்ளைகளுக்கு வழங்கும் பகல் உணவுக்காக 30 ரூபா ஒதுக்கப்பட்டது. தற்போது அந்தத் தொகை 60 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களுக்குப் பகல் உணவு முறையாகக் கிடைக்கப்பெறுவதில்லை.

நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக இல்லாதொழித்து நாட்டு மக்களை மந்தபோசணைக்குக் கொண்டு சென்ற தரப்பினர் தற்போது புதிய அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.
பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்புக்கு கூற வேண்டியவர்கள் தற்போது மேலவை இலங்கை கூட்டணி என்ற புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளார்கள்.

லீ குவான் யூ சிங்களே எனக் குறிப்பிட்டவர்கள், வைத்தியர் ஷாபி தொடர்பில் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்கள் தற்போது புதிய அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்கள்.
நாட்டு மக்கள் இவர்களிடம் ஏமாறக்கூடாது. பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சர்கள் மாத்திரமல்ல இவர்களும் பொறுப்புக்கூற வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச நாட்டுக்கு மீள வந்துள்ளமை ஒரு வழியில் நல்லது. இல்லாவிடின் மஹிந்த சுழங்கவைப் போல் கோட்டா சுழங்கவையும் ஆரம்பித்திருப்பார்கள். தற்போதைய நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவதானத்துடன் இருக்க வேண்டும்.

மந்த போசனைக்குள்ளாகியுள்ள பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியாத நிலையில் உள்ள போது தீக்கிரையாகிய வீடுகளுக்கான நட்டஈட்டை அரசியல்வாதிகள் இரட்டிப்பாக்கியுள்ளார்கள்.
தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படைப் பிரச்சினைகளுக்கும், நீண்ட காலக் கோரிக்கைகளுக்கும் நிலையான தீர்வை அரசு வழங்க வேண்டும்.

கடந்த நாட்களில் வெளிநாட்டுக்குத் தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டு அந்நாடுகளின் அரசியல் தரப்பினர், புலம்பெயர் இலங்கையர்களுடன் சந்திப்பில் ஈடுப்பட்டேன்.

முன்னேற்றமடைந்துள்ள நாடுகள் அதிகாரத்தைப் பகிர்ந்தளித்துள்ளன. புலம்பெயர் அமைப்புக்களின் முதலீடுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அதிகாரப் பகிர்வு அவசியமானது.

எதிர்வரும் காலங்களில் வெளிநாடுகளில் அரசியலில் தொடர்புமில்லாமல் உள்ள இரண்டாம் தரப்பினருடன் ஒன்றிணைந்து இலங்கைக்கான ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, அதிகாரப் பகிர்வு ஆகியவற்றுக்குத் தீர்வு அவசியமாகும்” – என்றார்.

Related Articles

Latest Articles