“எதிர்காலத்தில் தமிழ்ச் சமூகமோ முஸ்லிம் சமூகமோ இலங்கையில் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால் நாம் இணைந்துதான் செயற்பட வேண்டும். அந்த இணைவு எமது தனித்துவ அடையாளங்களை அழித்து விடுவதாக இல்லாமல், மாறாக அவற்றை உறுதி செய்வதாக இருக்க வேண்டும்.”
– இவ்வாறு தெரிவித்திருக்கின்றார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்.
நேற்று மாலை நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடத்திய பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் 25 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வில் நினைவுப் பேருரை நிகழ்த்துகையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் 20 ஆவது நினைவு தினப் பேருரையை 2020ஆம் ஆண்டு சம்மாந்துறையில் நிகழ்த்தியிருந்தேன். இன்று அன்னாரது 25ஆம் ஆண்டு நினைவு தினத்தில் நினைவுப் பேருரை நிகழ்த்துமாறு எனக்கு அழைப்பு விடுத்த ரவூம் ஹக்கீமுக்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக்கு மத்தியில் இன்னமும் பரஸ்பர சந்தேகங்களும் நெருடல்களும் தொடர்ந்தும் நிலவி வருகின்ற காலத்தில் ஐந்து ஆண்டு கால இடைவெளிக்கும் பிறகு இரண்டாவது தடவையாகத் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த எனக்கு விடுக்கப்பட்ட இந்த அழைப்பை பெரும் கெளரவமாகவே நான் கருதுகின்றேன். புட்டும் தேங்காய்ப் பூவுமாக வாழ்கின்றோம் என்று மார்தட்டிக் கொள்ளும் (நீத்துப் பெட்டி அல்ல, குழல் புட்டு) எமது சமூகங்களின் உறவு, என்றுமில்லாதவாறு இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆகையால் அந்தத் தலைப்பிலேயே இந்த நினைவுப் பேருரையை ஆற்றலாம் என்று எண்ணினேன். அதுவே பெருந்தலைவர் அஷ்ரப்புக்குச் செய்யும் உயரிய அஞ்சலியாகவும் கருதுகின்றேன்.
தமிழ் – முஸ்லிம் உறவு என்பது அந்த இரு சமூகங்களுக்கும் உயிர் வாயு (ஒட்சிசன்) போன்றது. முழு நாட்டின் சூழ்நிலைக்கும் இது பொருத்தமானது என்றாலும், அதன் வெற்றியோ தோல்வியோ கிழக்கிலே, அதுவும் அம்பாறை மாவட்டத்திலேயே நிச்சயப்படுத்தப்படும் என்பதை பெருந்தலைவர் அஷ்ரப் நன்கு அறிந்திருந்தார். தமிழ் பேசுகின்ற முஸ்லிம் மக்களுக்கு தனியான ஓர் அரசியல் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் அவர்தான். ஆனால் அதே சமயத்தில் தமிழ் மக்களோடு பின்னிப் பிணைந்த ஓர் அடையாளத்தையே அவர் உருவாக்கிக் கொடுத்தார். அதற்கு இரண்டு அடிப்படைக் காரணங்கள் உண்டு.
ஒன்று – தாய்மொழி என்கின்ற ஆழமான அடையாளம். ‘தமிழ் பொதுவுடமை’ என்ற கவிதையிலே மார்ட்டின் லூதர் கிங் ஐப் போல, ‘கனவொன்று கண்டேன்..’ என்று ஆரம்பித்து ஏழுதிய கவிதையிலே அஷ்ரப் இதை எவ்வளவுக்கு அழுத்திக் கூறியிருக்கின்றார் என்பது தெரியவருகின்றது. அது மட்டுமல்ல, தான் ஒரேயொரு ஆங்கிலக் கவிதை எழுதியதாகவும், ஆனால் சமூகத்துடன் எனது தாய் மொழியான தமிழில் தொடர்பு கொள்வது எனக்குப் பெரும் நிம்மதியைத் தருகின்றது என்றும் எழுதியிருக்கின்றார்.
அரசியல் கண்ணாடியூடாகப் பார்த்தாலும் உலகெங்கும் மொழி என்பதே அரசியல் ஆட்புலங்களை நிர்ணயம் செய்கிறது என்பது புலப்படும். உலக வரைபடத்தில் நாடுகளின் அரசியல் எல்லைகளை அவதானித்தால் இது தெளிவாகப் தெரியும். ஐரோப்பா இதற்கு நல்ல உதாரணம். தாய்மொழி அடிப்படையிலேயே சகல நாடுகளும் பிரிந்திருக்கின்றன. தனித்தனி நாடுகளாகப் பிரியாவிட்டாலும், சுவிஸ்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின் போன்ற நாடுகளில் சமஷ்டி அலகுகள் மொழி அடிப்படையிலேயே பிரிக்கப்பட்டு உள்ளன. எமது அண்டை நாடான இந்தியாவிலும் மொழிவாரியான மாநிலங்கள் என்ற கோட்பாட்டின் அடிப்டையிலேயே ஆட்சி அலகுகள் அமைந்துள்ளன. இதற்கான காரணத்தை இலகுவாகக் கண்டு கொள்ளலாம். சமுக வாழ்விற்கு மொழி இன்றியமையாதது. ஒரு மொழி இல்லாமல் ஓர் அரசியல் அலகாக இயங்க முடியாது. மக்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தி, சம்பாஷித்து, கலந்துரையாடி, தங்களைத் தாங்களே ஆளுவதையே ஜனநாயகம் என்கின்றோம். இதைச் செய்வதற்கு மொழி இன்றியமையாதது. மொழிபெயர்ப்போடு செய்யப்படும் கலந்துரையாடலையும் ஒரே மொழியில் நிகழும் சம்பாஷனையையும் ஒப்பிட முடியாது. அதுவும் ஆட்சி அதிகார விடயங்களில் மொழிபெயர்ப்பில் தங்கியிருப்பது ஆபத்தில் கூட முடியலாம். இலங்கை நாட்டில் இரண்டு தாய்மொழிகள் வழக்கத்தில் உள்ளன. ஆகவே, அரசியல் அலகுகள் சம்பந்தப்பட்ட விடயங்களில் இந்தப் பிரதான பிரிவு முக்கியத்துவம் பெறுகின்றது.
இரண்டாவது – தமிழ் மொழி பேசும் மக்கள் இந்த நாட்டிலே எண்ணிக்கையில் சிறுபான்மையானவர்கள். தமிழ், முஸ்லிம் என்ற இரு சமூகங்களை சேர்த்துக் கணக்கிட்டாலும் பெரும்பான்மை சமூகத்தவர் எம்மை விட எண்ணிக்கையில் மூன்று மடங்கானவர்கள். அப்படியானதொரு சூழ்நிலையில் நாம் கூடியவரை சேர்ந்து இயங்குவதுதான் தமிழ் பேசும் இரண்டு சமூகங்களுக்கும் பாதுகாப்பானது. அப்படியாக நாம் சேர்ந்து இயங்கும்போது எமக்கிடையில் உள்ள வேறுபாடுகளையும் மதித்து அவற்றையும் எமது தனியான அடையாளங்களையும் ஏற்றுக் கொண்டு இயங்க வேண்டும்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி, இந்த நாட்டின் ஆட்சி முறை சமஷ்டியாக மாற்றப்பட வேண்டும் என்று கோரி தனிக் கட்சியாக உருவெடுத்த போதே ‘ஒரு சுயாட்சி தமிழ் அரசும்’ ஒரு ‘சுயாட்சி முஸ்லிம் அரசும்’ நிறுவ வேண்டும் என்று இரண்டு அலகுகளாக எமது கட்சி யாப்பில் ‘நோக்கம்’ என்ற தலைப்பின் கீழ் விதி 2 இலேயே கூறியுள்ளது.
சில நாள்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் அமரர் தர்மலிங்கத்தின் நினைவு நாளில் நான் கூறியபடி, 1971ஆம் ஆண்டு அரசியல் நிர்ணய சபையில் எமது கட்சியின் மாதிரி அரசியல் யாப்பை முன்வைத்த போதும் இதே எண்ணத்தின் அடிப்படையிலே ஐந்து சமஷ்டி அலகுகளாக நாடு பிரிக்கப்பட வேண்டும் என்றும், அந்த ஐந்தும் –
1. தெற்கு, மேற்கு பிரதேசங்களைக் கொண்ட மாநிலம்.
2. வட மத்திய, வட மேல் பிரதேசங்களைக் கொண்ட மாநிலம்.
3. மத்திய பிரதேசங்களைக் கொண்ட மாநிலம்.
4. வட, வட கிழக்கு பிரதேசங்களைக் கொண்ட மாநிலம்.
5. தென்கிழக்கு பிரதேசங்களைக் கொண்ட மாநிலம்.
– என்றும் இருந்ததை நான் நினைவுபடுத்தியிருந்தேன்.
இதே கோட்பாட்டின் அடிப்படையிலேதான் பெருந்தலைவர் அஷ்ரப்புக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் பின்னைய நாள்களில் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் ஒரு தெரிவாக தென்கிழக்கு அலகு இருந்தது. அதைக் குறித்து அஷ்ரப் தினகரன் வாரமஞ்சரிக்கு 1998ஆம ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் திகதி கொடுத்த நேர்காணலில் இப்படிக் கூறியிருக்கின்றார்.
அஷ்ரப் 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி மேடைகளிலே ‘அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழம் பெற்றுத் தராவிட்டாலும் தம்பி அஷ்ரப் அதைப் பெற்றுத் தருவான்’ என்று முழங்கியது எவரும் அறிந்ததே. ஆனால், அந்தத் தேர்தல் முடிவுகள், முஸ்லிம் மக்கள் தனி நாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை என்பதை அவருக்கு உணர்த்தியபோது அவர் அந்த ஜனநாயகத் தீர்ப்பை ஏற்றுப் பயணிக்க ஆரம்பித்தார். இன்று தமிழ் மக்களும்அவர்களது தலைவர்களும் கூட அதே நிலைப்பாட்டுக்கு வந்திருக்கின்றார்கள். இதிலே விசித்திரமான உண்மையொன்று என்னவென்றால், அந்தத் தேர்தலுக்குப் பின் ஜே.ஆர்.ஜயவர்த்தன, தமிழர் விடுதலைக் கூட்டணி வெற்றி பெற்ற தொகுதிகளில் கிடைத்த வாக்குகள் வடக்கு, கிழக்கில் 50 வீதத்துக்கும் குறைவானதால் தனி நாட்டுக்கான ஆணை கிடைக்கவில்லை என்று கூறியபோது, அமர்தலிங்கம், கிழக்கிலே முஸ்லிம் பெரும்பான்மை தொகுதிகளிலும் புத்தளத்திலும் தமிழர் விடுதலைக் கூட்டணி தோற்றிருந்தாலும், அங்கு பெற்ற 26 ஆயிரத்து 496 மொத்த வாக்குகளையும் சேர்த்து 50 வீதத்தையும் தாண்டியதாகக் காட்டியிருந்தார். இதிலேயும், தொகுதிகளிலே தோற்றிருந்தாலும், அஷ்ரப்பின் பிரச்சாரத்தின் பலனாகவே எமக்கான ஆணையைக் காட்டக் கூடியதாக இருந்தது என்பதை நாம் மறக்கக் கூடாது.
2000 ஓகஸ்ட் 3ஆம் திகதி சந்திரிகா அம்மையார், பெயரில் இல்லாவிட்டாலும் உள்ளடக்கத்தில் சமஷ்டியை ஒத்த புதிய அரசமைப்பு ஒன்றைப் பிரேரித்த போது, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கின்ற வரைக்கும் பேசுமாறு பணிக்கப்பட்டு, ஐந்தரை மணி நேரம் அஷ்ரப் உரையாற்றியமையை எவரும் மறக்க முடியாது. அன்று தமிழர் விடுதலைக் கூட்டணி அதற்கு ஆதரவு வழங்கியிருந்தால் இன்று அப்படியான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு உள்ளடங்களான ஆட்சி முறை இருந்திருக்கும்.
தந்தை செல்வா என்று நாம் அன்போடு அழைக்கும் எமது கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எமக்கு மட்டும் தலைவர் அல்லர். பெருந்தலைவர் அஷ்ரப்புக்கும் தந்தை செல்வாதான் தலைவர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி, முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இருந்த தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்களையே நிறுத்துவார்கள். பல தடவைகளில் கல்முனை போன்ற தொகுதிகளில் தேசிய கட்சிகளின் இரு முஸ்லிம் வேட்பாளர்களுக்கு இடையில் பலத்த போட்டி ஏற்பட்டால், எமது கட்சிக்காரர்கள் தந்தை செல்வாவிடம் வந்து இந்தத் தடவை நாம் தமிழர் ஒருவரை நிறுத்தினால் முஸ்லிம் வாக்குகள் பிரியும் போது தமிழர் வெல்ல வாய்ப்பு உண்டு என்று கூறுவார்களாம். ஆனால், அவரோ அதற்கு ஒருபோதும் இணங்கினார் அல்லர். அது முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் தொகுதி. வென்றாலும் தோற்றாலும் ஒரு முஸ்லிமையே நிறுத்த வேண்டும் என்று கூறுவார்.
தமிழ்ப் பேசும் மக்களாக ஒன்றாகப் பயணித்தாலும், இரு சமூகங்களினதும் தனித்துவத்தை மதித்து அதற்கு இடமளித்து இணைந்து செய்கின்ற பயணமாக அது இருக்க வேண்டும். இணைந்து செயற்படுவது அத்தியாவசியம். ஆனால் அந்த இணைவு பரஸ்பரம் எமது தனி அடையாளங்களை மதித்து அவற்றை வெளிப்படுத்துகின்ற விதமான அலகுகளையும் நாம் கட்டமைத்துக்கொள்ள வேண்டும்.
தனியான பிரதிநிதித்துவத்தைப் பற்றிப் பேசும் போது, வெட்டுப் புள்ளியின் விகிதாசாரத்தை 12.5 வீதத்தில் இருந்து 5 வீதமாக மாற்றிய பெருமை முற்று முழுதாக பெருந்தலைவர் அஷ்ரப்பையே சாரும். ஜனாதிபதி பிரேமதாஸாவுடன் பேசி, பெரும் அழுத்தம் கொடுத்து அந்த மாற்றத்தை அரசமைப்பில் ஏற்படுத்தியவர். இது சிறுபான்மைக் கட்சிகளுக்கு மட்டுமல்ல, சென்ற வருடம் வரை சிறு கட்சியாக இருந்த ஜே.வி.பிவுக்கும் பெரும் வரப்பிரசாதமாக இருந்தது. அந்த மாற்றம் ஏற்பட்ட காரணத்தினால்தான் அவர்கள் நாடாளுமன்றத்துக்கு வரவே முடிந்தது. அப்படி உள்நுழைந்தமையால்தான் அவர்கள் இன்று ஆட்சிப்பீடம் ஏறக்கூடியதாக இருந்திருக்கின்றது.
இந்த விடயத்திலும், வேறு பல விடயங்களிலும் அஷ்ரப் பெரும்பான்மைச் சமூகத்தினரோடு பேரம் பேசுவது குறித்து பல பாடங்களை எங்களுக்குப் புகட்டிச் சென்றிருக்கின்றார். இது விசேடமாக தமிழ் சமூகம் கவனத்தில் எடுக்க வேண்டிய ஒன்று.
எதிர்காலத்தில் தமிழ்ச் சமூகமோ முஸ்லிம் சமூகமோ இலங்கையில் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால் நாம் இணைந்துதான் செயற்பட வேண்டும். அந்த இணைவு எமது தனித்துவ அடையாளங்களை அழித்து விடுவதாக இல்லாமல், மாறாக அவற்றை உறுதி செய்வதாக இருக்க வேண்டும். இதற்குப் பெருந்தலைவர் அஷ்ரப்பினதும் இலங்கைத் தமிழரசுக் கட்சியினதும் தீர்க்கதரிசனமான கடந்த காலச் செயற்பாடுகள் எமக்கு முன்மாதிரியாக இருக்கின்றன. அந்த முன்மாதிரிகளைப் பின்பற்றினாலேயே தமிழ் – முஸ்லிம் உறவின் மூலமாக எமது இரண்டு சமூகங்களினதும் இருப்பை நாம் உறுதி செய்வது மட்டுமன்றி, எம்மை நாமே ஆளக்கூடிய ஆட்சி முறையை இந்த நாட்டுக்குள்ளேயே ஏற்படுத்தலாம்.” – – என்றார் எம். ஏ. சுமந்திரன்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முஸ்லிம் முழக்கம் மர்ஹும் ஏ.எல்.அப்துல் மஜீத்தின் “ஓயாத புயலும் சாயாத மரமும்” எனும் நூலும் வெளியீட்டு வைக்கப்பட்டது.
நூலின் முதல் பிரதியை முழக்கம் மர்ஹும் ஏ.எல்.அப்துல் மஜீதின் மனைவி மற்றும் மகன் ஹக்கானி மஜீத் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நூலாசிரியர் நபீல் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பியால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் அப்துல் வாசித், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ் தௌபீக், தேசிய காங்கிரஸ் தலைவரும் அக்கரைப்பற்று மாநகர மேயருமான ஏ.எல்.எம் அதாவுல்லாஹ், கட்சியின் பொருளாளர் ரஹ்மத் மன்சூர் மற்றும் கட்சியின் தவிசாளர்கள், பிரதித் தவிசாளர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், பெருந்திரளான பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.