பிரபாகரனின் இளைய மகன் பாலசந்திரன் மற்றும் இசைப்பிரியா ஆகியோர் விவகாரம் தொடர்பில் பொறுப்புகூறல் வெளிப்படுத்தப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார். சொல்லில் அல்ல இது செயலில் வெளிப்படுத்தப்பட வேண்டும் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் தீர்வு, பொறுப்புகூறல் என்பவற்றில் சாதகம் தென்பட்டால் மாத்திரமே தமிழர்களின் வாக்குகளை ஜனாதிபதி எதிர்பார்க்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் சாணக்கியன் மேலும் கூறியவை வருமாறு,
“ ஜனாதிபதி தேர்தலில் தெற்கில் இம்முறை மும்முனை போட்டி நிலவக்கூடும். வழமையாக இருவருக்கிடையில்தான் போட்டி நிலவும். தற்போதைய சூழ்நிலையில் சஜித், ரணில், அநுரவுக்கிடையில் போட்டி நிலவுகின்றது. எனவே , ஜனாதிபதி யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக தமிழ் பேசும் மக்களே திகழ்வார்கள்.
இதனை உணர்ந்துள்ளதால்தான் ஜனாதிபதி, எதிர்க்கட்சி தலைவர், அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் அடிக்கடி வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர். வடக்கு, கிழக்கு வாக்குகளின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மாகாணங்களில் இருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீள வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி பேசியுள்ளார். வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு 5 தடவைகள் அல்ல 50 தடவைகள் வேண்டுமானாலும் வாருங்கள், ஆனால் அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட விடயங்களில் வடக்கு, கிழக்கு மக்கள் மிக தெளிவாக உள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் வாக்குகள் அவசியமெனில் அதற்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முக்கிய சில விடயங்களை செய்தாக வேண்டும்.
குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, பொறுப்புகூறல் என்பன நிறைவேற்றப்பட வேண்டும். பிரபாகரனுடைய இளைய மகன் பாலசந்திரன், இசைப்பிரியா விவகாரங்கள் தொடர்பில் பொறுப்புகூறலை வெளிப்படுத்தும் வகையில் விசாரணை இடம்பெறும் என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். சொல்வது அல்ல, அதனை செய்ய வேண்டும். அப்போதுதான் வாக்குகள் பற்றி பரிசீலிக்கலாம். மாறாக வடக்கு, கிழக்கு வந்து செல்வதால் வாக்குகள் கிட்டபோவதில்லை.
வடக்கு, கிழக்கில் உள்ள ஒட்டுக்குழுக்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளன. இதுவும் ஜனாதிபதிக்கு பாதகமாக அமையக்கூடும்.” – என்றார்.










