இலங்கையில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு தமிழர்கள் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை பொது வேட்பாளராக அறிவித்துள்ளன.
ஆனால், இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறி, அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

தமிழ் பொது வேட்பாளர் யாரை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்?
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சில தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பொன்றை உருவாக்கி, அதனூடாக சுயேட்சை வேட்பாளராக பா.அரியநேத்திரன் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றார்.
”வடகிழக்கில் இருக்கக்கூடிய தமிழ் தேசியம் சார்ந்த மக்கள் ஒற்றுமைப்பட வேண்டும். ஒரு கொள்கை அடிப்படையில் ஒரு குரலால் சர்வதேசத்திற்குச் செய்திகளைச் சொல்ல வேண்டும். சிதறி இருக்கின்ற கட்சிகள் ஒற்றுமைப்பட்டு ஒன்றிணைய வேண்டும்,” பா.அரியநேத்திரன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
”கடந்த காலங்களில் ஜனாதிபதிகளை நாங்கள் ஆதரித்தும் இருக்கின்றோம். எதிர்த்தும் இருக்கின்றோம். தொடர்ச்சியாக நாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். அதனால், இந்த ஜனாதிபதித் தேர்தலிலும் நாங்கள் ஏமாறுவதற்கு தயாராக இல்லை. வடகிழக்கில் ஒரு பிரச்னை இருக்கின்றது. அவர்களுக்கான ஒரு உரிமை கொடுத்தால் மாத்திரம்தான், இலங்கையின் பொருளாதாரம் மீண்டு, வெற்றியளிக்கக் கூடிய வாய்ப்பிருக்கின்றது. இதை உணர்த்துவதற்காகவே இந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நான் களமிறக்கப்பட்டுள்ளேன்,” என அவர் கூறினார்.
இலங்கையின் ஜனாதிபதியாக தான் போட்டியிடவில்லை என கூறிய அவர், மாறாக வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கான விடிவை எதிர்நோக்கிய ஒரு குறியீடாகவே போட்டியிடுகின்றேன் எனவும் அவர் கூறுகின்றார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழர்களை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்தி தான் போட்டியிடுவதாக பா.அரியநேத்திரன் தெரிவிக்கின்றார்.
மலையக தமிழரின் ஜனாதிபதி வேட்பாளர் என்ன சொல்கின்றார்?
தமிழ் பொது வேட்பாளர் என்ற விஷயத்தில், இலங்கையிலுள்ள மலையகத் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவிக்கின்றார்.
நாட்டின் பிரஜாவுரிமை அற்ற சமூகமாக வாழ்ந்த மலையக சமூகம் பாரிய போராட்டங்களின் பின்னர் அந்த உரிமையை பெற்றதாக கூறிய அவர், மலையக மக்கள் தொடர்ந்தும் பல்வேறு அடிப்படை பிரச்னைகளை எதிர்நோக்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.
அவ்வாறு வாழும் சமூகம் குறித்து சர்வதேசத்திற்கு கொண்டு செல்லும் நோக்கிலேயே தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்வந்ததாக அவர் கூறுகின்றார்.
”இலங்கையில் மலையக மக்கள் போராடியே வாக்களிக்கும் உரிமையை பெற்றார்கள். பல வருட காலத்தில் வாக்களிக்கும் உரிமை மாத்திரம் இல்லாது போகவில்லை. ஒரு பிரஜைக்கு என்னென்ன உரிமைகள் கிடைக்க வேண்டுமோ அந்த உரிமைகள் எல்லாம் மறுக்கப்பட்டது. அதன் காரணமாக, மறுக்கப்பட்ட ஏனைய உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கான போராட்டம் நடந்துக்கொண்டிருக்கின்றது. ”
”இலங்கையில் சுதந்திரத்திற்கு பிந்தைய காலத்தில் இறுதி 30 வருட காலம் வடகிழக்கு மாகாண மக்களின் பிரச்னை பேசப்பட்டது போல, சுதந்திரத்திற்கு பின்னர் அரசாங்கத்தினாலேயே சட்டரீதியாக பிற்படுத்தப்பட்ட இந்த சமூகத்தின் குரல் சர்வதேச அளவில் வெளிப்பட வேண்டும்.” என எம்.திலகராஜ், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
”தமிழ்ப் பொது வேட்பாளர் என கூறிக் கொள்வோரும் மலையக தமிழர்கள் தொடர்பில் பேசவில்லை. அந்த எண்ணம் கூட அடிப்படையில் வரவில்லை. கொள்கை வகுப்பாளர்களும் இந்த மக்களின் பிரச்னைகளை புரிந்து கொள்ளவில்லை. இந்த மக்களின் பிரச்னைகளை சர்வதேச அளவில் கொண்டு செல்ல வேண்டும்,” எனவும் அவர் கூறினார்.

பொது வேட்பாளர் விவகாரத்தில் மலையக தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டார்களா?
வடகிழக்கு தமிழர்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும் போது, மலையக மக்களையும் இணைத்ததாகவே தீர்வை பெற்றுக்கொள்வோம் என தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் பிபிசி தமிழுக்குத் தெரிவிக்கின்றார்.
மலையக மக்களைப் புறக்கணித்து, வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்களை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழ் பொது வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் வெளியிட்ட கருத்துக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
”மலையகத் தமிழர்களை முன்னிறுத்தியே வடகிழக்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் எப்போதும் செயற்பட்டுள்ளன. மலையக மக்களுக்கான உரிமை மறுக்கப்பட்ட போது அதற்காக நாங்கள் குரல் எழுப்பியுள்ளோம். ஆனால் இந்த விடயத்தில் நான் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளேன்.” என்றார்.
மேலும், “எமது சகோதரர் திலகராஜ் அவர்கள் இந்த விஷயத்தை தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பிடம் கேட்டிருக்கலாம். அவரும் யாரோ திட்டமிட்டு ஒரு பேரினவாத ஜனாதிபதி வெற்றி பெறுவதற்காக போடப்பட்ட ஒரு கருவியே தவிர, அவர் சொல்கின்ற காரணமும் யாரோ ஒருவர் சொல்லி கொடுத்து சொல்கின்றாரே தவிர, அவரிடமிருந்து அது வரவில்லை. அது எங்களுக்கு தெரியும். எங்கள் விடுதலை போராட்டம் என்பது இன்று நேற்று நடைபெறவில்லை.”
“ஆகவே, நாங்கள் மலையக மக்களைப் புறக்கணித்து ஒதுக்கி விட்டு தீர்வை எடுக்க மாட்டோம். மலையக மக்களை மாத்திரமல்ல, தமிழ் பேசும் அனைவருக்கும் தீர்வை பெற்றுக்கொடுப்போம். எங்களுக்கு ஒரு தீர்வு வருகின்ற போது, அவர்களையும் இணைத்துக்கொள்வோம்,” என ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவிக்கின்றார்.
யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய மக்களால் விமர்சிக்கப்படுகின்ற பா.அரியநேத்திரனின் எந்தவொரு கருத்திற்கும் இப்போது பதிலளிக்க வேண்டிய தேவை தனக்கு இல்லை என எம்.திலகராஜ் கூறுகின்றார்.
அரசியல் பார்வயாளர்கள் சொல்வது என்ன?
தமிழ் பொது வேட்பாளர் விடயத்தை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் கொண்டு வந்தால், மலையக தமிழ் சமூகத்திற்கு அது பாதுகாப்பு ரீதியான அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பு எண்ணியிருக்கலாம் என அரசியல் ஆய்வாளரும், சுயாதீன ஊடகவியலாளருமான ஆர்.சனத் தெரிவிக்கின்றார்.

”ஜனாதிபதி தேர்தலில் வெல்ல முடியாது, எனினும், தமது கோரிக்கைகளை தென்னிலங்கைக்கும், சர்வதேச சமூகத்துக்கும் எடுத்துரைக்கும் நோக்கிலேயே தமிழ் பொதுவேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார் என தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்த தமிழ் பொது வேட்பாளர் முயற்சி அரசியல் ரீதியில் அக்னிப் பரீட்சையாகும். அதில் தோல்வி மற்றும் பின்னடைவு ஏற்படும் பட்சத்தில் அது தமிழர்களின் ஒற்றுமைக்கும் விடுக்கப்படும் பெரும் சவாலாகும்,” என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ் பொதுவேட்பாளர் முயற்சியை வடக்கு, கிழக்குக்கு வெளியில் கொண்டுவந்தால் அது சிங்கள மக்கள் மத்தியில் வாழும் மலையக தமிழர்களுக்கு பாதுகாப்பு ரீதியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும், சில வேளை இனவாத தேர்தல் பிரசாரத்துக்கு வழிவகுக்கக்கூடும் என்ற அச்சம் தமிழ் தேசிய பொது கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, மலையக தமிழர்களின் நலன்கருதி அவர்கள் வடக்கு, கிழக்குக்குள் இந்த கோஷத்தை மட்டுப்படுத்தி இருக்கலாம்,” என்றார்.
“அதேபோல வடக்கு, கிழக்குக்கு வெளியில் தமிழ் பொது வேட்பாளர் கோஷத்தை கொண்டுவர வேண்டாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவை அறிவித்துவிட்டன. எனவே, தமிழ்க் கட்சிகளின் ஐக்கியம் கருதியும் அவர்கள் அவ்வாறு செய்திருக்கலாம்.” என்கிறார்.
ஜனாதிபதி தேர்தலென்பது தமிழ் பேசும் சமூகத்துக்கு பேரம் பேசுவதற்கு இருக்கும் சிறந்த வாய்ப்பாகும் என்று கூறியவர், மக்கள் போராட்டத்தின் பின்னர் தென்னிலங்கை அரசியல் களமும் மாறியுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் என அனைத்து தமிழ்க் கட்சிகளும் இணைந்து பொதுக் கூட்டணி அமைத்து, பொதுக் கோரிக்கைகளை முன்வைத்து பிரதான வேட்பாளர்களிடம் பேச்சு நடத்தி இருக்கலாம் என ஆர்.சனத் கூறுகிறார்.
மேலும், “ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்ற நிலைப்பாட்டில் பிரதான வேட்பாளர்கள் இருப்பதால், வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ்க் கட்சிகள் பொதுவேட்பாளர் அணுகுமுறையை பின்பற்றியது நியாயப்படுத்தக் கூடியதாக இருக்கும் அதேவேளை, அவர்கள் வடக்கு, கிழக்குக்கு வெளியில் வந்து அது தொடர்பில் தீவிர பிரசாரத்தை முன்னெடுக்காமல் இருக்கும் அணுகுமுறை சிறந்ததே.” என்கிறார்.
”மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கு பிரதான வேட்பாளர்கள் அனைவரும் உறுதியளித்துள்ளனர். இது நெடுநாள் கோரிக்கை, எனவே, பிரதான வேட்பாளர்களை ஆதரித்து, அவர்களுடன் பேரம் பேசுதலே மலையக மக்களுக்கு நன்மை பயக்கும்.” என அரசியல் ஆய்வாளரும், சுயாதீன ஊடகவியலாளருமான ஆர்.சனத் தெரிவிக்கின்றார்.
நன்றி
பிபிசி தமிழ்
ரஞ்சன் அருண் பிரசாத்