“ தற்கொலை தாக்குதல்போன்றதொரு சவாலையே நானும், மனுஷ நாணயக்காரவும் ஏற்றிருந்தோம். மக்களை பாதுகாத்துவிட்டோம், ஆக எமக்கு எது நடந்தாலும் பரவாயில்லை, எமது புதிய பயணம் வெற்றிகரமாக தொடரும்.”
இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ நேற்று தெரிவித்தார்.
உயர்நீதிமன்ற தீர்ப்பையடுத்து நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்த ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் கூட்டாக ஊடக சந்திப்பை நடத்தி இருந்தனர். இதன்போது ஹரின் பெர்ணான்டோ கூறியவை வருமாறு,
“ ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் ஊடாகவே நான் நாடாளுமன்ற உறுப்பினரானேன். அதனால்தான் மக்களுக்கு சேவை செய்ய முடிந்தது, அதற்காக சஜித் பிரேமதாசவுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். நாடு தொடர்பில் சிந்தித்தே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கினேன். எத்தனை நாட்கள் பயணிக்க முடியும் என்ற உறுதிப்பாடு இருக்கவில்லை, எனினும், நானும், மனுச நாணயக்காரவும் ஈராண்டுகள் அமைச்சு பதவிகளை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளோம்.
எனக்கு வழங்கப்பட்ட அமைச்சு பதவியை வெற்றிகரமாக செய்துமுடித்துள்ளேன். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, உறுமய காணி உரித்து பத்திரம் வழங்கப்பட்டுள்ளது, எனவே, கவலையுடன் அல்ல, மகிழ்ச்சியுடன்தான் அமைச்சு பதவியில் இருந்து விடைபெறுகின்றேன்.
நானும், மனுச நாணயக்காரவும் அமைச்சு பதவிகளை கோரவில்லை, மாறாக சஜித்தை பொறுப்பேற்குமாறே கூறினோம், ஆனால் அவர் பொறுப்பேற்கவில்லை, அதனால்தான் கட்சியிலிருந்து நாம் வெளியேறினோம். சஜித் பிரேமதாசவுடன் எனக்கு தனிப்பட்ட பிரச்சினை கிடையாது, அவர் ஜனாதிபதியானால்கூட பரவாயில்லை, அவர் சவாலை பொறுப்பேற்காமை தொடர்பிலேயே எனக்கு பிரச்சினை உள்ளது.” – என்றார்.










