திகாம்பரம் நம்பவைத்து கழுத்தறுத்துவிட்டார் – புத்திரசிகாமணி குமுறல்!

தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவர் திகாம்பரம் நம்பவைத்து கழுத்தறுத்துவிட்டார் என்று பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் முன்னாள் தலைவர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தினகரி வாரமஞ்சரிக்கு அவர் வழங்கிய நேர்காணல் வருமாறு,

கேள்வி – நடந்து முடிந்த தேர்தலை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?  படுதோல்வி நிச்சயம் என்பது அனைவரும் அறிந்திருக்க ரணில் தலைமையிலான ஐ.தே.க வேட்பாளராக போட்டியிடத் துணிந்தது எப்படி? அரசியல் கணக்கில் தவறு நேர்ந்துவிட்டதா?

பதில் – ஐக்கிய தேசிய கட்சி படுதோல்வியடைந்து எங்கள் கட்சியின் தலைவரும் படுந்தோல்வியடைந்தார். நானும் தோல்வியடைந்தேன். அதற்காக நான் கவலைப்படப் போவதில்லை. இந்நாட்டில் மலையக மக்களுக்காக சேவையாற்றிய மிகப்பெரிய கட்சி ஐ.தே.க. இவர்களுடைய ஆட்சிக் காலத்திலேயே மலையக மக்கள் சிறப்பாக வாழ்ந்தார்கள். ஆனால் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் மலையகத்தில் பணம்தான் பெரிதாக பேசப்பட்டது. பணத்தை வீசியவர்கள் வென்றார்கள். புதிதாக அரசியலுக்கு வந்தவர்கள் கூட இந்த தேர்தலில் ஐ.தே.க.வை விட இரு மடங்கு வாக்குகளைப் பெற்றார்கள். பணம் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது.

குறிப்பாக பணம் என்று பார்க்கும்போது சாராய போத்தல்களும் போதைப்பொருட்களும் நடந்து முடித்த தேர்தலின்போது இளைஞர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. நான் தோட்டப் பகுதிகளுக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றவேளை மக்கள் அனைவரும் ஐ.தே.க.வுக்கே வாக்களிப்பதாக கூவித் திரிந்தார்கள். ஆனால் தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது என்னவாயிற்று என்பதே தெரியவில்லை.

நான் முதன் முதலாக அரசியலுக்கு வந்தபோது நுவரெலியா மாநகர சபையிலேயே போட்டியிட்டேன். அப்போது 2000 ரூபா மாத்திரமே எனது தேர்தல் செலவாக அமைந்தது. அன்று நான் பணம் செலவழிக்காமல் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றமையால் இன்றுவரை பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இருந்ததில்லை.

கேள்வி – நீங்கள் ஏன் கட்சி மாறிக்கொண்டே இருக்கிறீர்கள்? நன்பகத்தன்மையற்றவர் என்ற பிம்பத்தை அல்லவா இது உருவாக்கும்?

பதில் – நான் மட்டுமா கட்சி மாறுகின்றேன். எத்தனைபேர் கட்சி மாறிக்கொண்டேதான் இருக்கின்றார்கள். எத்தனை கட்சி மாறிவிட்டதாக எண்ணி என்னிடம் இக்கேள்வியை கேட்கிறீர்கள்?

என்னைப் பொறுத்தவரை ஒரேயொரு முறைதான் கட்சி மாறியிருக்கின்றேன். ஐ.தே.க.விலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு மாறியிருக்கின்றேன். அதற்கு காரணம் அன்று ஐ.தே.க.வில் எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காமையால் அங்கிருந்து செல்ல வேண்டியதாயிற்று. நடந்து முடிந்த தேர்தலின்போதும் ஐ.தே.க.விலேயே போட்டியிட்டேன். அக்கட்சியில்தான் தொடர்ந்து இருக்கின்றேன்.

2014ம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவுடன் நான் இருக்கவில்லை. சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களுடனே இருந்தேன். ஒரு தீபாவளித் தினத்தன்று ஐ.தே.வுக்கு எதிராக பெரிய போராட்டம் ஒன்றை நடாத்தினர். நாம் தீபாவளி தினமாததால் போராட்டத்தை அன்றைய தினம் நடாத்த வேண்டாம் என்று கூறினேன்.

தமிழர்கள் அதிகமாக வாழும் கொழும்பில் தீபாவளித் தினத்தன்று ஒரு போராட்டமா அதனை பின்தள்ளி போடுமாறும் கேட்டேன். அதற்கு அவர்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை. ஆதலால் அன்றே அக்கட்சியிலிருந்து விலகி மீண்டும் ஐ.தே.கவுக்குச் சென்றேன்.

கேள்வி – 2015 இல் ட்ரஸ்டின் தலைவரானீர்கள். 2019 தேர்தலில் உங்களுக்கு பதவி வழங்கிய திகாம்பரத்தை விட்டு விலகி ஐ.தே.க.வுக்கு தாவினீர்கள். இது என்னவிதமான அரசியல்?

பதில் – திகாம்பரத்தை விட்டு வரக்காரணம் தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் மனித அபிவிருத்தி நிதியத்தின் தலைவராக பணியாற்றினேன். சம்பளம் எதுவும் இல்லாமல் கெளரவ பதவியாகவே அதனை செய்தேன். மூன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் சிறிய ஒரு கொடுப்பனவை திகாம்பரம் வழங்கினார். நான் அதனைக்கூட பொருட்படுத்தவில்லை.

2015 ம் ஆண்டு திகாம்பரத்துடன் இணைந்தபோது அப்போது இடம்பெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பதாக கூறியிருந்தார். ஆனால் வழங்கவில்லை. திலகராஜுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனை நான் ஏற்றுக்கொண்டேன். பின்னர் தேசியப் பட்டியலில் வாய்ப்பளிப்பதாக தெரிவித்தார். அதனை மனோகணேசனின் நெருங்கிய பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தோழி ஒருவருக்கு வழங்கப்பட்டது.

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் எனக்கு நிச்சயமாக திகாம்பரம் வாய்ப்பளிப்பார் என்ற நம்பிக்கையிலேயே இருந்தேன். ஆனால் என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார். அப்போது ஐக்கிய மக்கள் சக்தியில் நான் போட்டியிடுவதற்கு திகாம்பரமே காரணமாக இருந்தார்.

மனோ கணேசனுக்கும் திகாம்பரத்திற்கும் கூறிவிட்டே ஐக்கிய மக்கள் சக்தி காரியாலயத்தில் கையொப்பமிட்டு விட்டு வீட்டுக்கு சென்றேன். வீட்டுக்கு சென்று சில நிமிடங்களில் மின்னஞ்சல் ஒன்று வந்தது. நான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு விட்டதாக. மறுநாளே திகாம்பரத்திடம் சென்று கேட்டேன். ஏன் என்னை கட்சியை விட்டு விலக்கிவிட்டீர்கள்? உங்கள் விருப்பத்தின் பேரில்தானே அங்கு சென்றேன். இப்போது என்னை கட்சியிலிருந்து விலக்கிவிட்டதாக கூறுகிறீர்கள் என்றேன்.

அதற்கு அவர் பதில் கூறவில்லை. மறுநாள் ஐக்கிய மக்கள் சக்தியின் காரியாலயத்திற்கு சென்று பார்க்கும்போது என்ன நடந்தது என்று எனக்கே தெரியவில்லை. என்ன மாயாஜாலமோ தெரியவில்லை. நான் கையொப்பமிட்ட படிவங்கள் எதுவும் அங்கு இருக்கவில்லை. ஆனால் முதல் நாள் நான் மாத்திரமே தேர்தல் வேட்பு மனுவில் கையொப்பமிட்டிருந்தேன். ஏதோ சூழ்ச்சி நடந்துள்ளதை எண்ணி மனம் உடைந்த நிலையில் அங்கிருந்து வெளியேறி ஐ.தே.க.வுக்கு சென்று தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டேன். உடனடியாக அந்த வாய்ப்பினை எனக்கு தந்தார்கள். ஆனால் இத்தேர்தலில் ஐ.தே.க.வின் தலைவரும் கட்சியும் தோல்வியடைந்தது பெரிய விடயமல்ல.

கேள்வி – உங்கள் எதிர்கால அரசியல்…?

பதில் – எதிர்கால அரசியல் என்றால் அது ஐ.தே.க.தான். நான் அரசியலை ஆரம்பித்ததே ஐ.தே.க.வில்தான் அதனால் தொடர்ந்தும் அதிலேயே இருப்பேன். எதிர்காலத்தில் ஐ.தே.க எவ்வாறான முடிவுகளை எடுக்கின்றதோ அதற்கு கட்டுப்பட்டு செயற்படுவேன்.

சீக்கிரமே 2025க்கு சென்று விடுவோம். அப்போது மலையக சமூகத்தின் நிலைமைகளும் தேவைகளும் மாறி இருக்கும். கேள்வி என்னவென்றால், எதிர்காலத்துக்கு ஏற்றமாதிரி எவ்வாறான மாற்றங்களை செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்?

எனக்கு அவசரமாக செய்யக்கூடிய விடயங்கள் என எதுவும் இல்லை. எதையும் அவசரமாக செய்யவும் முடியாது. ஐ.தே.க படுதோல்வியடைந்துள்ள நிலையில் அடுத்த தலைவர் யார்? அதன் செயற்பாடுகள் எப்படி இருக்க போகின்றது என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால் நான் மீண்டும் ஐ.தே.க.வில் சேர்ந்தமை மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது.

எனது அரசியல் அனுபவத்துக்கோ கல்வி தகமைக்கோ தகுந்த மரியாதை தொழிலாளர் தேசிய சங்கத்தில் கொடுக்கவில்லை. இவை அனைத்துமே எனக்கு ஐ.தே.க.வில் கிடைத்தது. தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஒரு சில கூட்டங்களின்போது நான் அமர்வதற்கு ஆசனமே கொடுத்ததில்லை. அவ்வாறான சந்தர்ப்பங்களின்போது நான் மிகவும் வேதனையடைந்தும் இருக்கின்றேன். ஒரு மனிதனுக்கு மரியாதைதான் முக்கியம். அந்த அங்கீகாரம் ஐ.தே.க.வில்தான் எனக்கு கிடைத்தது.

நேர்கண்டவர் – பி.கேதீஸ்

Related Articles

Latest Articles