தமிழில், ‘ஓய்’, அசோக் செல்வனின் ‘நித்தம் ஒரு வானம்’ ஆகிய படங்களில் நடித்திருப்பவர், தெலுங்கு நடிகை ஈஷா ரெப்பா. இவர் இப்போது ‘ஓம் சாந்தி சாந்தி சாந்தி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.
இதை இயக்கி நாயகனாக தருண் பாஸ்கர் நடித்திருக்கிறார். மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ என்ற படத்தின் ரீமேக்கான இப்படம் நாளை வெளியாகிறது. இப்படத்தின் ஹீரோ தருண் பாஸ்கரை, ஈஷா ரெப்பா காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.
இதுபற்றி ஈஷா ரெப்பாவிடம் கேட்டபோது, “உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாததை உங்களால் திட்டமிட்டுச் சொல்ல முடியாது. சரியான நேரத்தில் சரியான விஷயங்கள் நடக்கும் என்று நம்புகிறேன். இதற்கு எந்த விளக்கமும் கொடுக்க விரும்பவில்லை. என் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் ஏதும் நடந்தால், அதை நானே அறிவிப் பேன்” என்றார்.
தருண் பாஸ்கர் கூறும்போது, “திருமணம் பற்றி அறிவிப்பதற்கு சரியான நேரத்துக்காகக் காத்திருக்கிறேன். ஈஷா ரெப்பா, ஒரு தோழியை விட அதிகமாக, ஒரு துணையாக, எனக்கு எல்லாமுமாக இருக்கிறார். அதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. இது தனிப்பட்ட விஷயம் என்பதால், எனது அறிவிப்பு மற்றவர்களைப் பாதிக்கலாம். எல்லாம் சரியாக நடந்தால், கடவுள் விரும்பினால், விரைவில் அறிவிப்போம்” என்றார்.
