வாக்குறுதி வழங்கியமைக்கு அமைய தேசியப் பட்டியல் ஆசனங்களை வழங்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்றுவிட்டு தேசியப் பட்டியலை வழங்க தயக்கம் காட்டுவது ஏற்றுக்கொள்வதை ஏற்க முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் உள்ள சிறுபான்மையினத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தேசியப் பட்டியல் வாக்குறுதி அளித்தபடி வழங்காவிட்டால், ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் சிறுபான்மைக் கட்சிகள் நாடாளுமன்றத்தில் தனிக்குழுவாக செயற்பட வேண்டிவரும் என்றும் எச்சரிக்கையும் விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆறு ஆசனங்கள் கிடைத்துள்ள நிலையில், தேசியப் பட்டியல் மயில்வாகனம் திலகராஜிற்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக திலகராஜ் உள்வாங்கப்பட வேண்டும் என்ற அழுத்தங்கள் தற்போது அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கடந்த நாடாளுமன்றத்தில் மலையக மக்களின் பிரச்சினைகளை அதிகமாக பேசிய திலகராஜ் உள்வாங்கப்படாவிட்டால் அவருக்கான ஆதரவைத் தனியாக திரட்ட இளைஞர்கள் சிலர் பேச்சு நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்திக்கு 7 போனஸ் ஆசனங்கள் கிடைத்துள்ளன. இவற்றில், அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, ஹரீன் பெர்னாண்டோ, திஸ்ஸ அத்தநாயக்க, இம்தீயாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோருக்கும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசியப் பட்டியல் விபரங்களை வழங்க எதிர்வரும் 14ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.