நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள அனைவருக்கும் எவ்வித பாகுபாடுமின்றி நிவாரண பொதி மற்றும் நிவாரண தொகை வழங்கப்பட வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய மயில்வாகனம் உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தற்போது நாட்டில் மிக வேகமாக பரவி வருவதை காண முடிகிறது. இன்று வரை 11 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட ஒரு மாத காலத்துக்குள் கிட்டத்தட்ட ஐயாயிரத்திற்கும் அதிகமானவர்கள் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையை கருத்தில் கொண்டு தற்போது மேல் மாகாணம் முழுவதும், நாட்டின் மேலும் சில பகுதிகளிளும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகள் தனிமைபடுத்தப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான குடும்பங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த கொரோனா காலத்தை போன்று அல்லாது இம்முறை எவ்வித பேதமுமின்றி தனிமைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் அரசாங்கத்தினால் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள பத்தாயிரம் ரூபா பெறுமதியான நிவாரணப் பொதிகள் மற்றும் 5000 ரூபா நிவாரண கொடுப்பன உரியவாறு வழங்கப்பட வேண்டும்.
நாட்டில் சுகாதாரத் துறை மிக மோசமான நிலையில் காணப்படுவது சில வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிடும் கருத்துக்களின் மூலம் காண முடிகிறது. பீசிஆர் பரிசோதனை இயந்திரம் பழுதடைதல், வெண்டிலேட்டர் பற்றாக்குறை போன்ற விடயங்களில் இதனை காணக்கூடியதாக இருக்கிறது. நாட்டில் இன்று வரை அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள போதிலும் இன்னும் சமூக பரவல் இல்லை என்ற கதையை சுகாதார அமைச்சர் கூறிக் கொண்டிருக்கிறார்.
கொரோனா தொற்றினால் அரச ஊழியர்கள், பொலிசார், பாதுகாப்பு படையினர், தனியார் ஊழியர்கள், தோட்டத் தொழிலாளர்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பாகுபாடின்றி நிவாரணம் வழங்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் இந்த அரசாங்கத்தினுடைய செயற்பாடுகள் வெறுமனே பேச்சு மட்டத்திலேயே இருந்துள்ளதை காண முடிகிறது.
அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை குறைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதும் அரசாங்கம் அறிவித்த விலையில் அரிசி, சீனி, செமன் போன்றவற்றை மக்கள் எங்கு வாங்கலாம் என தேடிக் கொண்டிருக்கிறார்கள். வர்த்தமானி அறிவித்தல் மற்றும் கட்டளைகளை பிறப்பிப்பது மாத்திரம் அரசாங்கத்தின் கடமை அல்ல அதனை முறையாக செயல்படுத்தி மக்களுக்கு நன்மை பயக்குவதும் அரசாங்கத்தின் தலையாய கடமையாகும்.
எனவே இம்முறையும் இந்த கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வருமானம் இன்றி வீடுகளில் முடங்கி உள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் நாங்கள் ‘திகா – உதயா’ நிவாரணத் திட்டத்தின் ஊடாக உலர் உணவுப் பொருட்களை வழங்கி வருகிறோம். அதுபோல சில தனி நபர்கள் தொண்டு நிறுவனங்கள் இவ்வாறு நிவாரணங்களை வழங்கி வருகின்றன. ஆனாலும் இவை போதுமானதாக இல்லை.
எதிர்வரும் வாரங்களில் தீபாவளி பண்டிகை வருகிறது மக்கள் தற்போது வருமான குறைவு காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஊரடங்கு, தனிமைப்படுத்துதல் போன்ற விடயங்களால் மேலும் அவர்கள் சிரமத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த போதும் சில கம்பெனிகள் இம்முறை 8000 ரூபா மாத்திரமே வழங்க நடவடிக்கை எடுத்துள்ளன.
இது மிகவும் அநீதியாகும். இந்த மக்களுக்கு வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்த ஆயிரம் ரூபாய் இன்னும் வழங்கவில்லை. ஆனால் இந்த தீபாவளி முன்பணம் என்பது அந்த மக்களின் சம்பள பணத்தில் மீள அறவிடப்படும் ஒன்றாகும். அதனையும் குறைத்து வழங்குவது அந்த மக்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகும். எனவே இதுவிடயத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர் தலையிட்டு உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
