சர்வக்கட்சி இடைக்கால அரசொன்றை ஸ்தாபிப்பதற்காக எதிரணிகளை ஓரணியில் திரட்டி – பொது நிலைப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான இரண்டாம் சுற்று பேச்சு இன்று (06) நடைபெற்ற நிலையில், முக்கியமான சில முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பங்களிப்புடனேயே, சர்வக்கட்சி அரசு தொடர்பான அரசியல் மட்டத்திலான கலந்துரையாடல் முன்னெடுக்கப்படுகின்றது.
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று (06) நடைபெற்ற 2 ஆம் சுற்று பேச்சில், ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சுதந்திரக்கட்சி, 43 ஆம் படையணி, தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் சர்வக்கட்சி அரசொன்றை ஸ்தாபிப்பதற்கான – நகர்வுகளை முன்னெடுப்பதற்கு குழுவொன்றை அமைப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கட்சி தலைவர்களை உள்ளடக்கிய வகையில் அரசியல் நடவடிக்கை மற்றும் பொருளாதார விவகார குழுவொன்றை அமைப்பதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சர்வக்கட்சி அரசுக்கான முதல் சுற்று பேச்சு நேற்று நடைபெற்றது. ஜே.வி.பிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதிலும் அக்கட்சி பங்கேற்கவில்லை. இன்றைய சந்திப்பிலும் அக்கட்சி உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை.
எனினும், உரிய வேலைத்திட்டத்துடன், தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு, சர்வக்கட்சி அரசொன்று ஸ்தாபிக்கப்படுமானால் வெளியில் இருந்து கொண்டு அதற்கு ஆதரவு வழங்க தயார் என அநுரகுமார திஸாநாயக்க கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அறிவித்தார்.
அதேவேளை, எதிரணிகளின் பங்களிப்புடன் அமையும் சர்வக்கட்சி அரசுக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் உள்ள உறுப்பினர்களும் ஆதரவு வழங்குவார்கள் எனவும், இலகுவில் 113 ஐ திரட்டக்கூடியதாக இருக்கும் எனவும் எதிரணி உறுப்பினர்கள் நம்பிக்கை வெளியிட்டனர்.
ஆர்.சனத்










