நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஹட்டன் மாணிக்கப்பிள்ளையார் கோவிலை மையமாகக் கொண்டு இந்த ஆண்டு தேசிய தீபாவளி விழாவை அக்டோபர் 20 ஆம் திகதி நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் புத்த சாசனம் மற்றும் மத விவகார அமைச்சின் செயலாளர்
டபிள்யூ.பி. சேனாதீர தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆண்டு தேசிய தீபாவளி விழாவை மாணிக்கப்பிள்ளையார் கோவில் மற்றும் ஹட்டன் நகரத்தை மையமாகக் கொண்டு பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது,
மேலும் சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
நுவரெலியா பௌத்த மந்திரின் தலைவரும் நுவரெலியா பிராந்திய புத்தசாசன மண்டலத்தின் பதிவாளர், வணக்கத்திற்குரிய கிரியோருவே தீரானந்த தேரர், மகா சங்கத்தினர் மற்றும் இந்து குருக்கள் குழுவினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன், புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் எச்.என்.குமாரி, இந்து அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் வை.அனிருத்தன், மேலதிக மாவட்ட செயலாளர்கள், நுவரெலியா மாவட்ட பிரதேச செயலாளர்கள், பாதுகாப்பு படைத் தலைவர்கள், இலங்கை போக்குவரத்து சபை டிப்போ முகாமையாளர்கள், அரச அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
தலவாக்கலை பி.கேதீஸ்