தேசிய மக்கள் சக்தியை டில்லி அழைத்ததன் பின்னணி என்ன?

அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களை, இந்தியா பேச்சுக்கு அழைத்துள்ளமையானது தேசிய அரசியல் களத்தின் மட்டுமல்ல இராஜதந்திர வட்டாரங்களின் பார்வையையும் அக்கட்சி பக்கம் திரும்பிபார்க்க வைத்துள்ளது.
அத்துடன் இலங்கை தொடர்பான டில்லியின் வெளிவிவகாரக் கொள்கையில் இது குறிப்பிடத்தக்க மாற்றமாகவும் கருதப்படுகின்றது.

இந்திய அரசின் அழைப்பின் பிரகாரம் டில்லி சென்ற தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸநாயக்க தலைமையிலான குழுவினர், இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை சந்தித்து நேற்று (6) சந்தித்து பேச்சு நடத்தினர்.

இது குறித்து தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கலாநிதி ஜெய்சங்கர், அநுர குமார திஸநாயக்கவை சந்தித்தது மகிழ்ச்சியளிக்கின்றது எனக் கூறியுள்ளார்.
“நமது இருதரப்பு உறவு மற்றும் அதன் மேலும் ஆழமான பரஸ்பர நன்மைகள் பற்றிய ஒரு நல்லதொரு உரையாடல் இடம்பெற்றது. இலங்கையின் பொருளாதார சவால்கள் மற்றும் முன்னோக்கி செல்லும் பாதைகள் குறித்தும் பேசினோம்”- என்று அவர் பதிவிட்டுள்ளார்.

எனினும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக கொண்டு வரப்பட்ட இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் கூறப்பட்டமைக்கு அமைய, தமிழர்களுடன் அதிகாரப் பகிர்வு பற்றி தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுடன் இந்திய தரப்பு விவாதித்ததா என்பது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே ஜே.வி.பி. இருக்கின்றது. எனினும், அனைத்து இன மக்களுக்கும் சம உரிமை கிடைக்கப்பெறும் வகையில் புதிய அரசமைப்பொன்று அவசியம் என்ற நிலைப்பாட்டிலும் அக்கட்சி உள்ளது.

ஐந்து நாட்கள் பயணமாக இந்தியா சென்றுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதிகள அரசியல் மற்றும் வர்த்தகத்துறையின் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்திவருகின்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் தலைநகர் அம்தாவாதிற்கும், இடதுசாரிகள் ஆட்சி செய்யும் தென்னிந்திய மாநிலமான கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்திற்கும் பயணிக்கவுள்ளனர்.
தமது கட்சியை இந்தியா அழைத்துள்ளமையானது நல்லதொரு இராஜதந்திர நகர்வு என தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரச்சாரக் குழுவின் உறுப்பினர் சாந்த ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

“ இதற்கு முன்னர் எப்போதும் இல்லாத வகையிலான இந்த நடவடிக்கை இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், தேசிய மக்கள் சக்தியின் வளர்ந்து வரும் சர்வதேச செல்வாக்கு மற்றும் கேந்திர ரீதியான பார்வையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, குறிப்பாக இரண்டு பொருளாதார சக்தி நாடுகளான சீனா மற்றும் இந்தியா இடையேயான உறவுகளுக்கும் இடையே எப்படி சமப்படுத்திச் செல்கிறோம் என்பதையும் இது காட்டுகிறது.” – எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் இவ்வருடம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ள அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை இந்தியா அழைத்துள்ளமை கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“இந்த விஜயம் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது மாத்திரமல்லாமல், இலங்கையின் அரசியல் நிலப்பரப்பிற்கு தெளிவான சமிக்ஞையையும் அனுப்புகிறது, இது தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தேசிய மக்கள் சக்தியை ஒரு முக்கியமான சக்தியாக இந்தியா அங்கீகரிக்கிறது”. – என்று அரசியல் ஆய்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அறகலயவின் பின்னர் தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவு பெருகி வருகின்றது, அக்கட்சிக்கு 3 சதவீத வாக்குகளே உள்ளன என சிலர் விமர்சித்தாலும் அதில் கணிகசமானளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

அநுர குமார திஸநாயக்கவுடன் தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிஹால் ஜயசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மற்றும் பொருளாதார நிபுணர் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோரும் சென்றுள்ளனர்.

Related Articles

Latest Articles