நுவரெலிய மாவட்டத்தில் பிரதேச செயலக அதிகரிப்பு விடயத்தில் காட்டப்படும் பாரபட்சத்திற்கு எதிராகவும் காலி மாவட்டத்தைப் போன்றே சமதரதுவமாக நடைமுறைப்படுத்தக் கோரியும் மலையக அரசியல் அரங்கம் முன்னெடுத்துவரும் பொதுமக்களை மனுவில் கையெழுத்து இடும் இயக்கத்தில் இணைந்து கொள்ளவும் எதிர்வரும் மலையக அரசியல் அரங்கத்துடன் இணைந்து மலையகத்தில் அறிவார்ந்த அரசியலை முன்னெடுக்கவும் உள்ளதாக ‘ தேயிலை எம் தேசம்’ அமைப்பினர் தமது ஒருமைப்பாட்டைத் தெரிவித்து உள்ளனர்.
மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மயில்வாகனம் திலகராஜ் தலைமையில் இடம்பெற்ற பொதுமக்கள் மனுவில் கையொப்பமிடும் நிகழ்வில் கலந்து கொண்டு தமது அமைப்பின் சார்பில் மனுவில் கையொப்பமிட்டதுடன் தமது ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்தினர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ‘தேயிலை எம் தேசம்’ அமைப்பின் தலைவர் ரவி,
மலையகத்தில் ஏமாற்று அரசியலை முன்னெடுப்பதே மரபாகியுள்ள நிலையில் மாற்று அரசியல் சிந்தனையை விதைக்கும் மலையக அரசியல் அரங்கத்துடன் கரம் கோர்ப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.
கடந்த பாராளுமன்ற காலத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் செயற்பட்ட விதம் குறித்து அடுத்த தலைமுறையினரான எங்களுக்கு புதிய நம்பிக்கை பிறந்தது. அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் மலையகத்துக்கான எதிர்கால அரசியல் குறித்த அவரது எண்ணங்களைத் திரட்டி மலையக அரசியல் அரங்கத்தின் ஊடாக முன்வைத்துள்ளார்.
அத்தகைய அறிவார்ந்த அரசியல் தளத்தில் செயற்படுவதற்கு எமது ஒருமைப்பாட்டைத் தெரிவித்து இன்று பொதுமக்கள் மனுவில் ‘தேயிலை எம் தேசம்’ குழுவினர் கையொப்பம் இட்டுள்ளோம். தொடர்ந்தும் மலையக அரசியல் அரங்கத்தில் இணைந்து செயற்படவும் எமது அமைப்பு தீர்மானம் எடுத்துள்ளது எனவும் தெரிவித்தார்.
‘தேயிலை எம் தேசம்’ குழுவினரை வரவேற்றுப் பேசிய மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ்,
மலையக செயற்பாட்டுத் தளத்தில் அழுத்தக் குழுக்களாகச் செயற்படும் பல சமூகக் குழுக்களைக் காண முடிகிறது. ஆனால் அத்தகைய அழுத்தக் குழுக்கள் ஏமாற்று அரசியலுக்கா அல்லது மாற்று அரசியலுக்கா தமது அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என சிந்தித்துச் செயற்படவேண்டி உள்ளது எனவும் தெரிவித்ததுடன், பூமாலைகள், பொன்னாடைகள் இட்டு வரவேற்பதற்கு அப்பால் புத்தகங்களைக் கொடுத்து ‘தேயிலை எம் தேசம்’ குழுவினரை வரவேற்கிறேன் என தனது ‘மலைகளைப் பேசவடுங்கள்’ நூலை வழங்கி அவர்களை வரவேற்றார்.










