“தனது வீட்டை கொளுத்தியபோதும் எதற்கும் அஞ்சாது நாட்டை பொறுப்பேற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலுக்கு அஞ்சும் நபர் கிடையாது. தேர்தலெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.
தற்போதைய அரசின் வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கி செல்லும் வழிகளை மக்களுக்கு அறிவிக்கும் வகையில் “ஒன்றிணைந்து வெல்வோம்” எனிம் தொனிப்பொருளின் கீழான கம்பஹா மாவட்ட மக்கள் சந்திப்பு நேற்று கடவத்தையில் நடைபெற்றது.
இதன்போது உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலுக்கு அஞ்சுகின்றாராம், அதனால்தான் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் கொண்டுவரப்படுகின்றது என எதிரணிகள் பிரச்சாரம் முன்னெடுக்கின்றன.
நாட்டில் வரிசை யுகம் ஏற்பட்டு, மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டபோது துணிவுடன் சவாலை எதிர்கொண்ட தலைவர்தான் ரணில் விக்கிரமசிங்க, அவரின் வீட்டை எரித்தபோதுகூட விட்டு ஓடவில்லை. இவ்வாறு எதற்கும் அஞ்சாத ஜனாதிபதி ரணில், தேர்தலுக்கு அஞ்சுவாரா? தேர்தல் எல்லாம் அவருக்கு ஒரு பெரிய விடயமே அல்ல.
அதேவேளை, நாட்டின் நலன்கருதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கரம்கோர்க்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்.” – என்றார்.
