தைவான் சீனாவின் ஒரு அங்கம் என்று அந்நாடு தொடர்ந்து உரிமை கொண்டாடி வரும் நிலையில், தற்போது தைவானை சுற்றி தனது 21 போர் விமானங்கள், 11 கடற்படை கப்பல்களை சீனா நிலை நிறுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தைவான் தனிப்பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது.
உலக நாடுகள் அமெரிக்கா உட்பட, தைவான் என்பது சீனாவுடன் இணைந்த பகுதி என்று ஏற்றுக்கொண்டிருக்கிறது. இருப்பினும், கடந்த சில மாதங்களாக அமெரிக்கா தைவானுக்கு ஆதரவு கொடுத்து வருகிறது. இதனால் தைவான் சீனாவுக்கு எதிராக திரும்பியிருக்கிறது.
அதாவது சீனாவை கலந்தாலோசிக்காமல் தைவான் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, ஒப்பந்தம் மேற்கொள்வது என அமெரிக்கா சில நடவடிக்கையில் இறங்கியது. இது சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இருந்த உரசல்களை மேலும் தீவிரமாக்கியது. இந்நிலையில் கடந்த 2022ல் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு சென்றிருந்தார்.
இது சீனாவுக்கு ஆத்திரமூட்டவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தைவானை ஒட்டியுள்ள கடற்பரப்பில் போர் பயிற்சியை மேற்கொண்டது. அப்போது தொடங்கி தற்போது வரை அமெரிக்காவின் முக்கிய பிரதிநிதிகள் தைவானுக்கு செல்வதும், சீனா போர் பயிற்சியை மேற்கொள்வதும் வாடிக்கையாகிவிட்டது.
“தைவான் பிரதிநிதிகள் மற்ற நாடுகளுக்கு சென்று தங்கள் உரிமை குறித்து பேசுவதை சீனா தடுத்திருக்கலாம். ஆனால், அமெரிக்காவின் பிரதிநிதிகள் தைவானுக்கு செல்வதை தடுப்பதன் மூலம் தைவானை சீனாவால் தனிமைப்படுத்திவிட முடியாது” என்று அமெரிக்கா பகிரங்கமாக கூறியிருக்கிறது.
இந்நிலையில் தைவானை சீனா தற்போது சுற்றி வளைத்திருக்கிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி, SU-30, J-16 மற்றும் KJ-500 உட்பட மொத்தம் 21 சீனாவின் ராணுவ போர் விமானங்கள் தைவானை சுற்றி நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன. அதேபோல 11 போர் கப்பல்களும் தைவானை சுற்றி நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. இது தவிர 7 சீன கடலோர காவல்படை கப்பல்களும் தைவானை சுற்றி இருக்கின்றன.
இது குறித்து கூறிய தைவான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறுகையில், “நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தைவான் ஜலசந்தியில் அதிகரித்து வரும் பதற்றம், இங்கு நிலவும் புவிசார் அரசியல் சிக்கல்களை எடுத்துக்காட்டுகிறது. சீனாவிடம் இருந்து அதிகரித்து வரும் இராணுவ அழுத்தத்திலிருந்து, எங்களது இறையாண்மை மற்றும் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான நாங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்” என்று தெரிவித்திருக்கிறது.
இருப்பினும் தைவானின் குற்றச்சாட்டை சீனா மறுத்திருக்கிறது. “நாங்கள் ஒருபோதும் தைவானை கட்டுப்படுத்தவில்லை. தைவான் என்பது சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி. தேவைப்பட்டால் சில உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ளவும் நாங்கள் தயங்க மாட்டோம். பிரிவினைவாத சக்திகளை நாங்கள் ஒருபோதும் ஊக்குவிக்க மாட்டோம்” என்று சீனா தெரிவித்திருக்கிறது.
கடந்த சில நாட்களாகவே தைவானுக்கு, சீனா தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறது. இது ஆசிய கண்டத்தில் போர் சூலை உருவாக்கும் என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.