தொண்டமான் பரம்பரையின் பூர்வீக இல்லமான இறம்பொடை, வேவண்டன் பங்களாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் சுமார் 150 வருடகால பழமையான தளபாடங்களும், முக்கியமான சில நினைவுச்சின்னங்களும் தீக்கிரையாகியுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
1904 ஆம் ஆண்டு முதல் பராமரிக்கப்பட்டுவரும் குறித்த பங்களாவிலேயே முக்கியமான சில அரசியல் சந்திப்புகளும், வரலாற்று முக்கியத்துவமிக்க தீர்மானங்களும் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலம்தொட்டு எடுக்கப்பட்டுவந்தது.
இந்நிலையில் காங்கிரஸின் அரசியல் செங்கோட்டையில் தீ விபத்து ஏற்பட்டமையும், பழமையான தளபாடங்களும் சேதமடைந்துள்ளமை காங்கிரஸ் ஆதரவாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதும் முதலில் அது தொடர்பில் ஜீவன் தொண்டமானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் செந்தில் தொண்டமானுக்கும், மருதபாண்டி ராமேஷ்வரனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பதுளையில் இருந்த செந்தில் தொண்டமான் அதிகாலை 4.30 மணியளவிலும், மடக்கும்பரையிலிருந்து அதிகாலை 3.30 மணியளவில் ரமேசும், கொழும்பிலிருந்து ஜீவன் தொண்டமான் அதிகாலை 5.30 மணிக்கும் சம்பவ இடத்துக்கு வருகை தந்துள்ளனர்.
பிரதேச மக்களும், தீயணைப்பு படையினரும், பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.