நுவரெலியா மாவட்டத்தில் சுகாதார அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றாளர் ஒருவருடன் நேரடி தொடர்பில் இருந்தபோதும் அவர் தனிமைப்படுத்தப்படாமை தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் சந்தேகம் ஏற்பட்டது. அதிகாரிகளுக்கும் பொது மக்களுக்கும் வெவ்வேறான சட்டமா? என்ற கேள்வியும் எழுகின்றது.
இது தொடர்பாக தெரியவருவதாவது
கடந்த நொவம்பர் மாதம் 25 ஆம் திகதி கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை பி.சி.ஆர் பரிசோதனை மூலமாக தெரியவந்ததை தொடர்ந்து அவர் கொரோனா தடுப்பு மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அதே நேரம் அவருடன் நேரடி தொடர்பில் இருந்த பொலிசாரும் பொதுமக்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு சுகாதார பிரிவினரால் உட்படுத்தப்பட்டுள்ளனர்.ஆனால் குறித்த நபருடன் நேரடி தொடர்பில் இருந்த நுவரெலியா மாவட்ட சுகாதார அதிகாரி ஒருவர் தனிடைப்படுத்தப்படாமை தொடர்பாக பல்வேறு மட்டத்திலும் கேள்விகள் ஏற்பட்ட போதிலும் இதனை வெளியில் கூறுவதற்கு யாரும் தயாராக இருக்கவில்லை. இது தொடர்பாக சுகாதார பிரிவினர் தெரிந்திருந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குறித்த விடயம் தொடர்பாக எமக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரியுடன் தொலைபேசி ஊடாக தொடர்பை ஏற்படுத்தி விடயத்தை அறிந்து கொண்ட பொழுது அவர் இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார்.
இது தொடர்பாக குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் கருத்து தெரிவிக்கையில்
கடந்த மாதம் 22 ஆம் திகதி நுவரெலியா மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்னிடம் சுமார் 25 நிமிடங்கள் அளவில் உரையாடிக் கொண்டிருந்தார்.இதன்போது நான் அவருக்கு தேநீர் கோப்பை ஒன்றையும் வழங்கினேன்.பின்பு எனக்கு 23 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை எடுக்கப்பட்டது.இதன்படி முடிவு 25 ஆம் திகதி கிடைத்த பொழுது அதில் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.அதன் அடிப்படையில் நான் கொரோனா மத்திய நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளேன்.என தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக நுவரெலியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தில் கடமையாற்றும் சுகாதார அதிகாரி ஒருவரிடம் கேட்ட பொழுது குறித்த சுகாதார அதிகாரி சுகாதார முறைப்படியே கொரோனா தொற்றாளருடன் தொடர்பில் இருந்துள்ளதாகவும் அது பெரிய பிரச்சினை இல்லை எனவும் பதில் வழங்கியுள்ளார்.
ஆனால் இங்கு சந்தேகத்தை ஏற்படுத்துவது குறித்த அதிகார் சுகாதார முறையுடன் இருந்திருந்தாலும் அவர் தேநீர் அருந்துகின்ற பொழுது வாயை மூடிக் கொண்டு அருந்தினாரா?என்ற கேள்வியும் ஏற்படுகின்றது.எனவே பொது மக்களுக்கு ஒரு சட்டமும் அதிகாரிகளுக்கு ஒரு சட்டமுமா? என்ற கேள்வியே பொது மக்களிடம் எழுகின்றது.
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு










