ஜனாதிபதி தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகிவிட்டது. எமது கட்சி தலைவரான ரணில் விக்கிரமசிங்க தேசிய பொதுவேட்பாளராக களமிறங்கி மக்களின் அமோக ஆதரவுடன் வரலாற்று ரீதியிலான வெற்றியை பதிவு செய்வது உறுதியாகியுள்ளது என்று ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூன்றுபேர் கொண்ட குழுவின் உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்தார். தெரிவித்தார். தெரிவித்தார்.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 700 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதில் எமது கட்சி உறுதியாகவுள்ளது எனவும், சம்பள உயர்வை வழங்க மறுக்கும் நிறுவனங்களின் குத்தகை ஒப்பந்தம் நிச்சயம் இரத்து செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார ஆகியோருடன் சுப்பையா ஆனந்தகுமாரும், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை சந்திப்பதற்கு சென்றிருந்தார்.
இச்சந்திப்பின் பிறகு ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட மேலும் கூறியவை வருமாறு,
“அரசமைப்பின் பிரகாரம் உரிய காலப்பகுதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருக்கின்றார். அந்தவகையில் தேர்தல் ஏற்பாடுகள் பற்றி ஆராய்வதற்கு வந்திருந்தோம். தேர்தலை நடத்துவதற்கான முதல் சந்தர்ப்பத்திலேயே தேர்தல் திகதியை நிர்ணயிக்குமாறு கோரிக்கை விடுத்தோம். நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கு எமது கட்சி முழுமையான ஆதரவை வழங்கும். ஏனெனில் அன்று முதல் இன்றுவரை ஜனநாயக வழியிலேயே அரசியல் பயணம் தொடர்கின்றது.
பொருளாதார போரில் இருந்து நாட்டை மீட்டெடுத்துள்ள உலகத் தலைவர்களுள் ஒருவராக போற்றப்படும் எமது ஜனாதிபதிக்கு நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு பெருகிவருகின்றது. அவரின் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில் இம்முறை வரலாற்று சாதனை படைக்கும் அளவுக்கு வாக்குகள் கிடைக்கப்பெறும் என்பது உறுதி. அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து இலங்கையர்களாக, நாட்டுக்காக , நாட்டின் காவலனுக்கு வாக்களிக்கவுள்ளனர்.
அதேவேளை, மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைக்கும் விடயத்தில் ஜனாதிபதி அதிக அக்கறையுடன் செயற்பட்டுவருகின்றார். அந்தவகையிலேயே மலையக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து பேச்சு நடத்தி இருந்தார். தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு நிச்சயம் தீர்வு கிட்டும். அவ்வாறு இல்லையேல் குத்தகை ஒப்பந்தம் இரத்து செய்யப்படும். இது தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
கிராமங்களுக்கு கிட்டும் அனைத்து அரச சேவைகளும், சலுகைகளும் பெருந்தோட்ட பகுதிகளுக்கும் பெற்றுகொடுக்கும் நோக்கிலேயே பெருந்தோட்ட குடியிருப்பு பகுதியையும் கிராமங்களாக பிரகடனப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்க வேண்டும்.
அத்துடன், மக்களின் பிரச்சினைகளை கேட்டறியவும், உரிய தீர்வு திட்ட பொறிமுறையை வகுக்கவும் கட்சி செயலாளர் பாலித ரங்கே பண்டாரவின் வழிகாட்டலுடன் எனது தலைமையில் தொடர்பாடல் குழுவொன்று அமைக்கப்பட்டள்ளது. எனவே, மக்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும், தமது கோரிக்கைகளையும் முன்வைக்கலாம்.” – என்றார்.










