” மலையக பெருந்தோட்டப்பகுதியில் உள்ள பயிரிடப்படாத காணிகள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என பிரதமராக இருந்தபோது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்திருந்தார். அந்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இத்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று பெருந்தோட்டத்துறை தொடர்பில் கேள்விகளை எழுப்பினார். இவற்றுக்கு பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன பதில்களை வழங்கினார்.
அதன்பின்னரே மனோ கணேசன் மேற்கண்ட வலியுறுத்தலை விடுத்தார். இதன்போது மனோ கூறியவை வருமாறு,
” நாட்டில் உணவு நெருக்கடி உக்கிரமடைந்திருந்தபோது, பெருந்தோட்டப்பகுதிகளில் பயிரிடப்படாத நிலங்கள், பயிர்செய்கைக்காக மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க கூறினார். இதற்காக விவசாய அமைச்சு, பெருந்தோட்டதுறை அமைச்சுடன் இணைந்து செயற்படுமாறும் அவர் குறிப்பிட்டார். தற்போது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி ஆகிவிட்டார். ஆனால் உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. எனவே, இது தொடர்பில் விசேடமாக கவனம் செலுத்தப்பட வேண்டும்.
நாட்டில் இன்னும் உணவு நெருக்கடி தீரவில்லை. மக்கள் உணவு வேளையை குறைத்துள்ளனர். பெருந்தோட்டப்பகுதிகளில் பல பிரச்சினைகள் உள்ளன. கல்வி, சுகாதாரம், போஷாக்கு என்பவற்றில் அவர்கள் பின்தங்கிய நிலையில் உள்ளனர். அப்பகுதி குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
வீட்டு தோட்டம் பற்றி அமைச்சர் கருத்து வெளியிட்டார். களுத்துறை, தெணியாய பகுதியில்
மொரவக்க தோட்டத்தில் வீட்டு தோட்டத்தில் மக்கள் ஈடுபட்டிருந்தாலும், காடையர்கள் பயிர்களை அழித்துள்ளனர்.” – என்றார்.
