” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்தும் கம்பனிகள் தரப்பில் இருந்து இன்னும் பதில் இல்லை. ஜனவரி மாதம்வரை கால அவகாசம் வழங்குகின்றோம். ஜனவரி மாதத்துக்குள் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும். வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற வகையில் நியாயமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும். நலன்புரி விடயங்களும் உள்ளடக்கப்பட வேண்டும்.”
இவ்வாறு இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய வடிவேல் சுரேஷ்,
‘ஜனாதிபதியின் கட்டளையை ஏற்காவிட்டால் பெருந்தோட்ட நிறுவனங்களின் உடன்படிக்கையை அரசு இரத்து செய்ய வேண்டும். ஜனாதிபதியின் கட்டளையை ஏற்காத கம்பனிகளை ஏன் தாலாட்ட வேண்டும்? பெருந்தோட்ட மக்களை வஞ்சிக்காத வகையிலேயே எமக்கு சம்பள உயர்வு அவசியம். நான் யாருக்கும் பயம் இல்லை. கம்பனி காரனிடமோ, கட்சி காரனிடமோ காசு வாங்கியது கிடையாது. மலையக மக்களை துன்புறுத்த வேண்டாம். அவர்களின் சாபம் கம்பனிகளையும், அவர்களுக்கு வக்காளத்து வாங்குபவர்களையும் நிச்சயம் தண்டிக்கும். ” – என்று குறிப்பிட்டார்.
