” மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் அமரர் பெ. சந்திரசேகரன் புரட்சி தலைவர் மாத்திரமின்றி, சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராவார்.” – என்று ஜக்கிய தொழிலாளர் முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்தார்.
அமரர் சந்திரசேகரனின் 14வது நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியயை வருமாறு,
” மறைந்த தலைவர் விட்டுசென்ற அரசியலை தனித்துவமான சிந்தனை உள்ளவர்களால் மாத்திரமே தொடர முடியும். தலைவரின் மறைவுக்கு பிறகு அவர் முன்னெடுத்த வேலேத்திட்டங்கள் நிறுத்தப்பட்டன. அவற்றை நாம் நிச்சயம் முன்னெடுப்போம்.
அதேவேளை, பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 1, 700 ரூபா வழங்கப்பட வேண்டும் என பெருந்தோட்ட நிருவனங்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த தொகையை வழங்க முடியாது என கம்பனிகள் கூறவில்லை.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கடந்தமுறை சம்பள நிர்ணய சபை ஊடாகவே சம்பள உயர்வு வழங்கப்பட்டது. எனவே, பெருந்தோட்ட நிறுவனங்கள் எமது கோரிக்கையை உதாசீனம் செய்தால் மீண்டும் சம்பள நிர்னய சபை ஊடாக அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை முதலாளிமார் சம்மேளனம் ஏற்க வேண்டும்.” – என்றார்.
பொகவந்தலாவை நிருபர் சதீஸ்










