தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்வே இழுத்தடிப்பு செய்த பெருந்தோட்ட கம்பனிகள் ஆயிரத்து 700 ரூபாவை எவ்வாறு வழங்குவார்கள் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி தலைவருமான மயில்வாகனம் உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இம்மாத இறுதியில் தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாட் சம்பளம் பெற்றுதருவதாகவும் இதை ஜனாதிபதி பெற்று தருவார் என்றும் கூறுகின்றார்கள். அப்படியானால் ஜனாதிபதி எந்த அடிப்படையில் இந்த 1700 ரூபா சம்பளத்தை தோட்ட தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க போகிறார் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
இராகலை புறநெகும மண்டபத்தில் ஞாயிற்று கிழமை (24) மாலை இடம்பெற்ற வலப்பனை பிரதேச மக்கள் சந்திப்பு இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வினா தொடுத்துள்ளார்.
“ நாடு கடந்த ஐந்து வருடங்களாக பொருளாதார சிக்கலில் தவித்து கொண்டிருக்கும் நிலையில் தோட்ட தொழிலாளர்கள் தமது நாளாந்த வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாது சொல்லொனாத் துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, ஆயிரம் ரூபா சம்பளத்தை வைத்து அவர்கள் எவ்வாறு வாழ்வது? அந்த ஆயிரம் ரூபாகூட முறையாக வழங்கப்படுவதில்லை.
தோட்டத்தொழிலைதவிர ஏனைய தொழில்துறையில் ஈடுபடுபவர்களுக்கு நாளொன்றுக்கு 2,500 ரூபா சம்பளம் கிடைக்கப்பெறுகின்றது.
எனவே, தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை ஈடுசெய்யக்கூடிய வகையில் நியாயமான சம்பள உயர்வாக நாளொன்றுக்கு 2 ஆயிரம் ரூபாவையாவது பெற்றுக்கொடுக்க வேண்டும்.” – எனவும் உதயா எம்.பி. தெரிவித்தார்.
ஆ. ரமேஷ்
