பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். குண்டுத்தாக்குதல் பற்றி கிடைத்த புலனாய்வு தகவல்களை மேசையில் பத்திரப்படுத்தி வைத்து பொறுப்பினை மீறியவர்கள் இந்த அரசாங்கத்தில் உயர்பதவிகளில் உள்ளார்கள். அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (11) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் முழுமையான அரசியலாகிவிட்டது.குண்டுத்தாக்குதல்கள் பற்றி போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்ற போது கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக செயற்பட்டார். இவர் தனது பதவிக்கான பொறுப்பில் இருந்து விலகியுள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு குற்றச்சாட்டுக்குள்ளானவரை பதவியில் வைத்துக்கொண்டு எவ்வாறு சுயாதீனமான முறையில் விசாரணைகள் இடம்பெறும் என்பதில் பாரிய சந்தேகம் காணப்படுகிறது. ஆகவே இவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்போம்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் கிடைத்த புலனாய்வுத் தகவல்களை கொண்டு எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமல் அவற்றை அலுவலக மேடையில் பத்திரப்படுத்தி வைத்தவர்கள் இந்த அரசாங்கத்தில் உயர் பதவிகளில் உள்ளார்கள். அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.