முன்னாள் முதல் பெண்மணி சிரந்தி ராஜபக்ச தனது சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்றிரவு இலங்கை திரும்பியுள்ளார்.
இவர் கடந்த 16 ஆம் திகதிஅதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தார்.
தனது மகன் ரோஹித ராஜபக்சவின் மாமியார் ஆன் டி லிவேராவுடன் (Anne de Livera) இவர் பயணித்திருந்த போதிலும், ஆன் டி லிவேரா சில தினங்களுக்கு முன்பே நாடு திரும்பியிருந்தார்.
நாடு திரும்பிய சிரந்தி ராஜபக்ச , கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறுவதற்காக 216 அமெரிக்க டாலர்களைக் கட்டணமாகச் செலுத்தி, முக்கிய பிரமுகர்களுக்கான “கோல்ட் ரூட்” (Gold Route) சிறப்புச் சலுகையைப் பயன்படுத்தியுள்ளார்.
இச்சலுகையின் மூலம், சாதாரணப் பயணிகளைத் தவிர்த்து, எவ்வித தாமதமுமின்றி நேரடியாக முனையத்தை வந்தடைய முடியும். அத்துடன், விமான நிலைய ஊழியர்கள் மூலமாகப் பயணப்பொதிகள் கொண்டுவரப்படுவதுடன், குடிவரவு-குடியகல்வுத் துறை அதிகாரிகள் மற்றும் சுங்க அதிகாரிகளே நேரடியாக இம்முனையத்திற்கு வருகை தந்து சோதனைகளை நிறைவு செய்து தருகின்றனர்.
