” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியென்பது சிங்கம்போன்றது. எனவே, எம்மீது தாக்குதல் தொடுக்க முற்பட வேண்டாம். அவ்வாறு தாக்குதல் நடத்தினால் நாமும் பதிலடி கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அடுத்த தேர்தலில் நாமே வெற்றிபெறுவோம். எமது கட்சி தலைமையில் ஆட்சி மலரும்.”
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரான முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 2ஆவது தேசிய சம்மேளனக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சூளுரைத்தார். பஸில் ராஜபக்ச மேலும் கூறியவை வருமாறு,
” அடுத்து என்ன தேர்தல் நடத்தப்பட்டாலும் அதில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே வெற்றிபெறும். ஏற்கனவே நடந்த தேர்தல்களிலும் வெற்றிநடைபோட்டோம். அந்த புகழ் எல்லாம் கட்சி ஆதரவாளர்களையே சென்றடைய வேண்டும். வெற்றியின் முழு உரிமையும் கட்சி ஆதரவாளர்களையே சாகும்.
இந்த நாட்டில் இரு தடவைகள் மரணபீதி ஏற்பட்டது. புலிகளுடனான போர் காலம் முதல் சந்தர்ப்பம். கொரோனா பெருந்தொற்று இரண்டாவத சந்தர்ப்பம். இந்த இரு சந்தர்ப்பங்களின்போதும் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசே நாட்டு மக்களை பாதுகாத்தது. இந்நாட்டில் மஹிந்த யுகத்திலேயே பொருளாதார புரட்சியும் ஏற்பட்டது. உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. கிராமங்கள்வரை அபிவிருத்தி திட்டங்கள் சென்றடைந்தன.
அடுத்து என்ன என்று எல்லோரும் கேட்கின்றனர்? அடுத்து எந்த தேர்தல் நடத்தப்பட்டாலும் அதில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை வெற்றிபெறவைப்போம். அதற்கான நடவடிக்கைகள் நிச்சயம் மேற்கொள்ளப்படும். நாம் எதற்கும் தயார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையில் ஆட்சியொன்றை அமைக்க அணி திரள்வோம்.
வீதியில் செல்லும் நாய்மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தினால், நாய் குறைத்துவிட்டு வேகமாக ஓடிவிடும். ஆனால் சிங்கத்தை நோக்கில் கல்வீச்சு தாக்குதல் நடத்தினால். சிங்கள் நின்று, திரும்பி பார்க்கும், அதுபோலவே எம்மீது தாக்குதல் நடத்த வரவேண்டாம். நாமும் பார்த்துக்கொள்வோம். ” – என்றார்.










