நாட்டில் கடந்த 6 வாரங்களில் 9 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இவற்றில் பெரும்பாலான சம்பவங்கள், பாதாள குழுக்களுடன் தொடர்புடையது என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பேலியகொட, பட்டிய சந்தியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றிரவு சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா மாவட்டத்துக்குட்பட்ட
மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனது மனைவி மற்றும் 2 வயது ஆண் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் இவர் பயணித்துக்கொண்டிருக்கையில், மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுத கும்பலே சரமாரியாக சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளது.
துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 2 வயது குழந்தையும் காயமடைந்துள்ளது. அத்துடன், சம்பவத்தின்போது வீதியில் சென்றுகொண்டிருந்த பெண்ணொருவரும் காயமடைந்துள்ளார்.
கொல்லப்பட்ட முன்னாள் பொலிஸ் அதிகாரி, பாதாள குழுவொன்றுடன் தொடர்பிணை பேணியிருந்த நிலையில், அவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார். இந்தநிலையில், நீண்ட காலமாக இரண்டு பாதாள குழுக்களுக்கு இடையில் காணப்பட்ட முரண்பாடுகளே துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளமைக்கான காரணம் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.










