நானும், ட்ரம்பும் எதிரிகள் அல்லர்!

“ எங்களுக்குள் கருத்து வேறுபாடு உள்ளது. ஆனால் நாங்கள் எதிரிகள் அல்லர்” என்று ட்ரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் 50 ஆயிரம் பேர் திரண்டிருந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜனாதிபதி பைடன் இச்சம்பவம் குறித்து நாட்டு மக்களுக்காக உரையாற்றியுள்ளார்.

இதன்போது அவர் கூறியவை வருமாறு,

“ எனது சக அமெரிக்கர்களே! நம் அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க விரும்புகிறேன். எனக்கும் ட்ரம்புக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நாங்கள் எதிரிகள் அல்லர் என்பதை உணர்த்த விரும்புகிறேன்.

நாம் அனைவரும் அமெரிக்கர்கள் என்றவகையில் ஒன்றுபட்டு நிற்பது அவசியம். தேர்தலை வாக்குகள் மூலமாகத் தான் எதிர்கொள்ள வேண்டுமே தவிர தோட்டாக்களால் அல்ல. அமெரிக்காவின் வரலாற்றை மாற்றும் உரிமை மக்களின் கைகளில் தான் இருக்க வேண்டுமே தவிர கொலையாளிகளின் கைகளில் இருக்கக் கூடாது.

தாக்குதலுக்குப் பின்னர் ட்ரம்ப் நலமாக இருக்கிறார் என்பதை அறிந்தேன். இத்தாக்குதலில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல். அவரது குடும்பத்துக்கு எங்களது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரின் இலக்கு என்னவென்பது இன்னும் தெரியவில்லை. குற்றத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைப் பற்றிய விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டுள்ளது.” – என்றார்.

Related Articles

Latest Articles