” நான் உயிரோடு இருக்கும்வரை இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் காரியாலயம் மற்றும் சொத்துக்களை கொள்ளையடிப்பதற்கு இடமளிக்க மாட்டேன்.” என நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
ராஜகிரியவில் அமைந்துள்ள இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் காரியாலயத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.
” இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைமை காரியாலயத்தையும் அதற்கு உரித்தான சொத்துக்களையும் கொள்ளையடிக்கும் நோக்குடன் இதற்கு முன்னரும் ஒரு சிலர் காரியாலயத்திற்கு அத்துமீறி நுழைந்து இங்குள்ள பொருட்களுக்கு சேதத்தை ஏற்படுத்தி சென்றார்கள். இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்து இருக்கின்றோம். இவ்விடயம் தொடர்பான சிசிடிவி காணொளியும் பொலிஸாருக்கும் ஊடகங்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளோம். இருந்தபோதிலும் அது தொடர்பில் எவ்விதமான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று இருக்கும் சூழ்நிலையில் சங்கத்தின் யாப்பின் பிரகாரம் நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளலாம் என்ற தீர்ப்பிற்கு அமைய நாம் சங்கத்தின் நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கின்ற சூழ்நிலையில் சங்கத்தின் சொத்துக்களை சூறையாடும் நோக்கி நயவஞ்சக செயற்பாடுகளில் ஒருசிலர் சட்டத்தை மீறி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
எது எவ்வாறாக இருந்தபோதிலும் மலையக பெருந்தோட்ட மக்களுக்கு சொந்தமான இந்த இடத்தையும் காணியையும் அவர்களுடைய உரிமைகளையும் கொள்ளையடிக்கும் நோக்குடனும் செயற்படுகின்ற எந்த ஒரு கூட்டத்திற்கும் நான் உயிரோடும் இருக்கும் மட்டும் இஸ் தங்கத்திற்கு உள் நுழைய அனுமதி இல்லை என்பதோடு இந்த சங்கத்தின் சொத்துக்கள் உடைமைகள் அனைத்தும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டுமே உரியது.” – என்றார்.
