எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்சவை தோற்கடித்து ராஜபக்சக்களுக்கு தக்கபாடம் புகட்டுவோம் என அறைகூவல் விடுத்துள்ளார் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் பஸில் ராஜபக்ச உள்ளிட்டவர்களே நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுவந்தனர். நீதிமன்ற தீர்ப்பு ஊடாகவும் இது உறுதியானது. வரிசை யுகம் உருவாகி நாட்டில் ஏற்பட்ட நிலைமைகளுக்கு ராஜபக்சக்கள் அனைவரும் பொறுப்பு கூறவேண்டும்.
ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்சவை களமிறக்கியதற்காக மஹிந்த ராஜபக்சவுக்கு நாம் நன்றிகூற வேண்டும். ஏனெனில் மொட்டு சின்னத்தில் களமிறங்கும் நாமலை படுதோல்வி அடைய செய்து எமது கோபத்தை, வைராக்கியத்தை வெளிப்படுத்துவதற்குரிய ஜனநாயக வாய்ப்பு உதயமாகியுள்ளது.
எமது நாடு ஜனநாயக நாடு, பங்களாதேஷ் போன்று இங்கு தீர்மானம் எடுக்க வேண்டும், ஜனநாயக வழியில்தான் தீர்மானம் எடுக்க வேண்டும். அந்தவழியில் மொட்டு கட்சியை பூஜ்ஜிய நிலைக்கு கொண்டுவருவோம். 2022 மே 9 மற்றும் ஜுலை 9 ஆம் திகதிகளில் கற்றுக்கொள்ளாத பாடத்தை செப்டம்பர் 21 ஆம் திகதி மஹிந்தவுக்கு கற்பிப்போம்.” – என்றார்.










