“இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின்போது டிஜிட்டல் பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட இரு தரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போது, இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் சம்பந்தமாக எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 ஆம் திகதி இலங்கை வருகின்றார். 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஏப்ரல் 05 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் பிரதமர் மோடிக்கு வரவேற்பளிக்கப்படவுள்ளது. அதன்பின்னர் எமது ஜனாதிபதியுடன் இரு தரப்பு சந்திப்பு நடைபெறும். இரு தரப்பு சந்திப்பு சம்பந்தமாக ஜனாதிபதியும், இந்திய பிரதமரும் ஊடக சந்திப்பை நடத்துவார்கள். சம்பூர் சூரிய சக்தி திட்டம் கொழும்பில் இருந்து திறக்கப்படும்.
ஏப்ரல் 6 ஆம் திகதி அநுராதபுரத்தில் ஸ்ரீமகாபோதியில் பிரதமர் மோடி வழிபாட்டில் ஈடுபடுவார். புகையிரத பாதை திறப்பு விழாவும் நடைபெறும்.
வலு சக்தி, சுகாதாரம், டிஜிட்டல் பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட இரு தரப்பு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன.” – என்றார்.
