” அமெரிக்காவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு சென்றுள்ள நிலையில், இங்கு திருகோணமலையில் பட்டப்பகலில் பொலிஸார் முன்னிலையில் குண்டர்கள், தமிழர்கள் மீது மிலேச்சத்தனமான முறையில் தாக்குதல் நடத்திச் சண்டித்தனம் காட்டியுள்ளார்கள். இந்தச் சம்பவம் தொடர்பில் அரசு
வெட்கித் தலைகுனிய வேண்டும்.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“திருகோணமலையில் நேற்றுமுன் தினம் தியாக தீபம் திலீபனை நினைவேந்தும் ஊர்தி மீது தாக்குதல் மேற்கொண்ட குண்டர் குழு, அந்த ஊர்தியில் பயணித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும்
நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மீதும், அவரின்
கட்சியின் செயற்பாட்டாளர்கள் மீதும் மிலேச்சத்தனமான முறையில் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தக் கொடூர சம்பவத்தை நாம் மிகவும் வன்மையாகக்
கண்டிக்கின்றோம்.
தியாகி திலீபனின் தியாகம் உன்னதமானது. அவரின் தியாகத்தை எவரும் கொச்சைப்படுத்த முடியாது. அவரை நினைவேந்துவதை எவரும் தடுக்க முடியாது.
பொலிஸார் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனைச் சுற்றிவளைத்து அந்தக் குண்டர்களகடுமையாகத் தாக்கியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினருக்கே பாதுகாப்பு இல்லாத இந்த நாட்டில் மக்களின் பாதுகாப்பு
எப்படி இருக்கும் என்பதைச் சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தத் தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்வது மட்டுமன்றி அவர்களைத் தூண்டி விட்டவர்களையும் கைது செய்ய வேண்டும்.
அதேவேளை, தாக்குதல் நடைபெற்றபோது அந்த இடத்தில் வேடிக்கை பார்த்த பொலிஸாருக்கு எதி ராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
– என்றார்.