‘நிறைவேற்றப்பட்ட பாதீட்டுக்கு சபாநாயகர் சான்றுரை’

2022 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

2022 ஜனவரி 01 ஆம் திகதி முதல் 2022 டிசம்பர் 31 வரையான நிதியாண்டுக்கான அரசின் செலவுகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (10) சான்றுரைப்படுத்தினார்.

இந்தச் சட்டமூலம் முதலாம் வாசிப்புக்காக கடந்த ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

அதனையடுத்து, கடந்த நவம்பர் 12 ஆம் திகதி கௌரவ நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு (வரவுசெலவுத்திட்ட உரை) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

அதற்கமைய, 07 நாட்கள் விவாதத்தின் பின்னர் நவம்பர் 22 ஆம் திகதி இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றதுடன் அது மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 153 வாக்குகள் ஆதரவாகவும் 60 வாக்குகள் எதிராகவும் கிடைத்தன.

அதனை அடுத்து நவம்பர் 23 ஆம் திகதி முதல் இன்று (10) வரை இடம்பெற்ற குழுநிலை நிகழ்ச்சியின் போது ஒவ்வொரு அமைச்சினதும் செலவுத்தலைப்புகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டன. அதற்கமைய இன்று மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றதுடன் இதன்போது ஒதுக்கீடுச் சட்டமூலம் திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கு ஆதரவாக 157 வாக்குகளும், எதிராக 64 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

அதற்கமைய, இன்று (10) பிற்பகல் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன , 2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார். அதற்கமைய 2021 ஆம் ஆண்டு 30 ஆம் இலக்க ஒதுக்கீடுச் சட்டம் இன்று முதல் வலுப்பெறுகின்றது.

Related Articles

Latest Articles