இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் என்பன உட்பட தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
” நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாம் உறுதியளித்தோம். அந்த உறுதிமொழிய நிச்சயம் நிறைவேற்றப்படும்.
மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எல்லை நிர்ணயம் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அப்பிரச்சினையை தீர்த்து தேர்தலை நடத்த வேண்டும்.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு மாகாணசபை முறைமை தீர்வு அல்ல என்றபோதிலும் தற்போது அம்முறைமை இருப்பதால் அதில் கைவைக்கப்படாது எனவும், புதிய அரசமைப்பு ஊடாக தற்போது இருப்பதைவிட சிறப்பான தீர்வு வழங்கப்படும் எனவும் நாம் உறுதியளித்துள்ளோம். இந்த உறுதிமொழியும் நிறைவேற்றப்படும்.” – எனவும் ஜே.வி.பியின் செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.