கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் மக்களின் சுகாதார பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசாங்கம் உடனடியாக செயற்பட்டு, பொதுமக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க அவசர வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் விசேட காணொளியொன்றை அவர் இன்று வெளியிட்டுள்ளார்.
தற்போதைய நிலவரம் நீடித்தால் ஜூன், ஜுலை மாதங்களில் நாளொன்றுக்கு 100 பேர் வரை உயிரிழக்கும் அவல நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதனால், அமைச்சரபையும், ஜனாதிபதியும் அதிகாரங்களை தங்களின் கைகளுக்கு எடுத்து பொறுப்புடன் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றும் இதற்கான அனுபவம் அமைச்சரவைக்கு இருக்கிறது எனவும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் கூறியுள்ளவை வருமாறு,
” நாம் இன்று நெருக்கடியான நிலையை எதிர்கொண்டுள்ளோம். சுகாதார பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. கொவிட் 19 வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதஒக்சிசன் தட்டுப்பாடு இருக்கிறது. வெண்டிலேட்டர் தட்டுப்பாடு இருக்கிறது. மருத்துவமனைகளில் கட்டில்களுக்கு தட்டுப்பாடு இருக்கிறது. மருத்துவமனைகள் நிறைந்து வழிகின்றன.
நாளுக்கு நாள் இந்த கொவிட் வைரஸ் பரவி வருகிறது. எனவே, நாம் மிகவும் நெருக்கடியாக காலகட்டத்தில் இருக்கிறோம். எமது மருத்துவர்களின் ஆலோசனைகளின்படி நாம் சரியான தீர்மானங்களை எடுக்காவிடின் நாம் பாரிய நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும்.
அதேபோல், வொஷிங்டன் பல்கலைக்கழக அறிக்கையொன்றின் படி, நாளுக்கு நாள் நிலைமை மோசமாகும் என்பதுடன் ஜூன், ஜூலை மாதங்களில் நாளொன்றுக்கு 100 பேர் மரணிக்கும் நிலை ஏற்படும். எனவே, இந்த நெருக்கடியான நிலையில் நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.
இது அரசாங்கத்தின் பெயரைத் தக்கவைத்துக் கொள்ளும் போராட்டம் அல்ல. இது அரசியல் போராட்டம் அல்ல. உண்மையில் இது மக்களின் உயிர்களைக் காப்பாற்றும் போராட்டம். அரசாங்கத்தை மாற்றுமாறு கோரவில்லை. இந்த நாட்டின் அரசியலமைப்பின் படி அமைச்சரவைக்கே பொறுப்பு இருக்கிறது. ஜனாதிபதியும், அமைச்சரவை அமைச்சர்களும் தங்களின் கைகளுக்கு அதிகாரங்களை எடுக்க வேண்டும். தற்போதுள்ள குழுக்கள் தோல்வியடைந்துள்ளன. இவைகுறித்து ஏற்கனவே கூறியிருந்தோம்.
எனினும், எதனையும் கண்டுகொள்ளவில்லை. பொதுமக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். அதிகாரங்களை அமைச்சரவையும் ஜனாதிபதியும் பொறுப்பேற்க வேண்டும்.
இந்தவாரமே எதிர்க்கட்சித் தலைவருடன் பேச்சு நடத்துங்கள். அவர்களின் யோசனைகளையும், ஒத்துழைப்புக்களையும் பெற்றுக்கொள்ளுங்கள். அவர்களும் அந்த ஒத்துழைப்பை வழங்க வேண்டும். உடனடியாக செயற்பட வேண்டும். இல்லையெனில் பல உயிர்களை இழக்க நேரிடம். பொதுமக்கள் குறித்து அக்கறை இருக்குமாயின், அமைச்சரவை இதனை பொறுப்பேற்க வேண்டும். அவர்களுக்கு இதுகுறித்து அனுபவம் இருக்கிறது. இதன்படி நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் விசேடமாக வேண்டுகோள் முன்வைக்கிறேன்.”
கொவிட் வைரசின் முதலாவது அலை ஏற்பட்ட போது, மருத்துவமனைகளைத் தயார் படுத்தி, கட்டில்களையும், வெண்டிலேட்டர்களையும் மேலதிகமாக தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த வருடமே ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியிருந்தமை இங்கு நினைவூட்டத்தக்கது.










