போதைப்பொருள் கடத்தல் காரரும், பாதளகுழு தலைவருமான ‘ஹரக் கட்டா’வை விடுவித்துக்கொள்வதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் 700 மில்லியன் ரூபா பேரம் பேசப்பட்டுள்ளது.
தென்மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் பொலிஸ் பிரதானிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரே மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு,
” ஹரக்கட்டா, குடு சலிது ஆகியோரை நாட்டுக்கு கொண்டுவரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டபோது இரு நாட்கள் இரவு நான் தூங்கவில்லை. மடகஸ்கார் நாட்டு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருடன் தொலைபேசி ஊடாக தொடர்பில் இருந்தேன். அத்துடன், விமானத்தில் ஏற்றும்வரை சிஐடி அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்தேன்.
கென்யாவுக்கு இவர்களை கொண்டுவந்த பின்னர், விமானம் புறப்பட்டுவிட்டது. இந்தியா பொறுப்பேற்கும் என தகவல் வராததால் கென்யாவில் விமானத்தில் ஏற்ப்படவில்லை. இதனயைடுத்து இரவு 11 மணிக்கு இந்தியாவுக்கு கதைத்தேன். அதன்பின்னர் கென்யாவுக்கு தகவல் சென்றது. அரை மணிநேரத்துக்கு பின்னர் மற்றுமொரு விமானத்தில் மும்பை வந்த பின்னர், அங்கிருந்து இலங்கை வரும் விமானம் புறப்பட்டுவிட்டது. இதனால் மும்பையில் 24 மணிநேரம் அவர்களை வைத்திருக்க வேண்டி ஆயிற்று. இவ்வாறுதான் நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம்.
இலங்கைக்கு கொண்டுவராமல், ஹரக்கட்டா உள்ளிட்டவர்களை டுபாய்க்கு அனுப்புவதற்காக என்னிடம் 700 மில்லியன் ரூபாவுக்கு பேரம் பேசினார்கள். இது ஜனாதிபதிக்கும் தெரியும். எவ்வளவு வேண்டுமானாலும் பணம் செலவளிப்பதற்கு அவர்கள் தயாராகவே உள்ளனர். இவ்வாறான சலுகைகளுக்கு அடிபணியக்கூடாது. அந்த பணத்தில் உண்டு வாழ்ந்தால் ஒருபோதும் சரிவராது.
என்னை அமைச்சு பதவியில் இருந்து நீக்குவதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுப்பதற்கு அவர்கள் தயாராக உள்ளனர். தடுப்பு காவல் உத்தரவை நீக்கிக்கொள்ள டிரான் அலஸ்தான் தடையாக உள்ளார் என ஹராக் கட்டாவின் மனைவிகூட கூறியுள்ளார்.” – என்றார்.
