நுவரெலியா மாநகரசபைக்கு புதிய உறுப்பினராக கல்யாணி சத்தரசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவருக்கான நியமன கடிதத்தை ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாலித்த ரங்கே பண்டார வழங்கினார்.
இதன்படி ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயமான சிறிகொத்தாவில் நேற்று (20) திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வின்போது ஐ.தே.க பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார நியமன கடிதத்தை வழங்கினார். முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க முன்னிலையில சத்திய பிரமாணம் செய்து நுவரெலியா மாநகரசபை உறுப்பினர் பதவியை கல்யாணி சத்தரசிங்க பெற்றுக்கொண்டார். நுவரெலியா மாநகரசபை உறுப்பினராகவிருந்த மஹிந்த சில்வாவிற்கும் ஐக்கிய தேசிய கட்சிக்குமிடையில் ஏற்பட்ட கட்சி முரண்பாட்டையடுத்து ஐக்கிய தேசிய கட்சி அங்கத்துவ உரிமையையும் நுவரெலியா மாநகரசபை உறுப்புரிமையிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
இந்த உறுப்புரிமை நீக்குவது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு நடைபெற்றது. நுவரெலியா மாநகரசபையில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு கடந்த நுவரெலியா மாநகரசபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் பட்டியல் சார்பில் போட்டியிட்ட திருமதி கல்யாணி சத்தரசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நவீன் திஸாநாயக்க முன்னிலையில் மாநகரசபை உறுப்பினராக கல்யாணி சத்தரசிங்க சத்திய பிரமாணம் செய்து பதவியேற்றுக் கொண்டார்.இந்நிகழ்வில் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ, ஐ.தே.க. முக்கியஸ்தர்களான சமல் சேனாரத், சாகல ரட்னாயக்க ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.
