நுவரெலியா மாவட்டத்திலுள்ள 46 போதனா மற்றும் ஆதார வைத்தியசாலைகளுக்கு நாளாந்தம் உணவு விநியோகிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
மத்திய மாகாண சுகாதார அமைச்சின் கீழ் செயற்பட்டு வரும், நுவரெலியா மாவட்டத்தின் 46 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளாந்தம் உணவு விநியோகிக்கும் ஒப்பந்தகாரர்களுக்கு கடந்த இரண்டு மாத காலமாக உரிய பணம் வழங்கப்படாமையினால், ஒப்பந்தகாரர்களினால் உணவு விநியோகிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
வைத்தியசாலையின் நிர்வாகத்தினால் நாளாந்தம் வழங்கப்படும் உணவு பட்டியலுக்கு அமைய, வைத்தியசாலைகளுக்கான உணவு நாளாந்தம் ஒப்பந்தகாரர்களினால் விநியோகிக்கப்படுகின்றது.
தாம் வர்த்தக நிலையங்களில் கடனுக்கு பொருட்களை கொள்வனவு செய்தே, வைத்தியசாலைகளுக்கு உணவு வகைகளை விநியோகிக்கப்பட்டு வருவதாக ஒப்பந்தகாரர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், கடந்த இரண்டு மாத காலமாக உரிய பணம் தமக்கு கிடைக்காமையினால், வர்த்தக நிலையங்களுக்கு கடனை மீள செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், தமது ஊழியர்களுக்கும் சம்பளத்தை வழங்க முடியவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில், நுவரெலிய மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் டொக்டர் நிஷங்க விஜேவர்தன கருத்து தெரிவித்துள்ளார்.
வருட இறுதி என்பதனால், பணம் கிடைப்பதில் சற்று தாமதம் நிலவுவதாக அவர் கூறியுள்ளார்.
எனினும், தமக்கு தற்போது கிடைத்துள்ள பணத்தை, முன்னுரிமை அடிப்படையில் ஒப்பந்தகாரர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த ஆண்டு முடிவடைவதற்கு முன்னர், ஒப்பந்தகாரர்களுக்கு உரிய பணத்தை செலுத்தி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நுவரெலிய மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் டொக்டர் நிஷங்க விஜேவர்தன கூறியுள்ளார்.
நன்றி – ட்டூசிலொன்