நுவரெலியா மாவட்டத்தில் 77 பேர் உயிரிழப்பு: 73 பேர் மாயம்!

சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் பலியானோரின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 73 பேர் காணாமல் போயுள்ளனர் என்று நுவரெலியா மாவட்ட செயலாளர் துசாரி தென்னகோன் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் இன்று 02.12.2025 காலை 10 மணிவரையிலான அனர்த்தம் தொடர்பான அறிக்கையை நுவரெலியா மாவட்ட செயலாளர் துசாரி தென்னகோன் ஊடகங்களுக்கு வழங்கினார்.அதன்படி நுவரெலியாவில் உயிரிழந்தோரின் தொகை 77 ஆகவும் காணாமல் போரின் தொகை 73 பேர் காணாமல்போயுள்ளனர்.

இந்த அறிக்கையின்படி நாள்தோறும் உயிரிழந்தவர்களின் தொகையும் காணாமல் போனோரின் தொகையும் அதிகரித்த வண்ணமே உள்ளது. இது எதிர்வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கலாம் எனவும் மாவட்ட செயலாளர் குறிப்பிடுகின்றார்.

அதே நேரம் தமக்கு தகவல்களை சேகரிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு சில பகுதிகளில் தொடர்புகளை ஏற்படுத்தி கிராம உத்தியோகஸ்தர்கள் பிரதேச செயலாளர்களிடம் தகவல்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலையும் இருப்பதாகவும் பாதைகள் முற்றாக சேதமடைந்துள்ளதால் அங்கு செல்வதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதாகவும் குறிப்பிடுகின்றார்.

அதே நேரம் தரை வழியாக செல்ல முடியாத கொத்மலை மதுரட்ட ஹங்குரன்கெத்த போன்ற பகுதிகளுக்கு உழங்கு வானூர்தி மூலமாக உணவுப் பொருட்களையும் ஏனைய பொருட்களையும் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதற்காக விமானப்படையினர் இராணுவத்தினர் பொலிசார் அரசசார்பற்ற நிறுவனங்கள் தொண்டு நிறுவனங்களின் உதவிகள் பெற்றுக் கொள்ளப்படுவதாகவும் குறிப்பிடுகின்றார்.

மேலும் அரசாங்கத்தின் உதவிகள் தனியார் துறையினரின் உதவிகள் என்பன நிவாரணங்களை வழங்குவதற்காக கிடைத்துவருவதாகவும் தொடர்ந்தும் உதவி செய்யக்கூடியவர்கள் எங்களுடன் தொடர்பு கொண்டால் நாம் சரியானவர்களுக்கு அந்த உதவிகளை கொண்டு சேர்ப்பதற்கு வழிகாட்ட முடியும் அதே நேரத்தில் நுவரெலியா மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள பாதைகளை திருத்தும் பணிகளை பாதை அபிவிருத்தி அதிகாரசபை உள்ளுராட்சி மன்றங்கள் அனைத்தும் இணைந்து இராணுவத்தினரின் உதவியுடன் முன்னெடுப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles