நுவரெலியா மாவட்டத்தில் காணிகளை கையகப்படுத்திய அரசியல் வாதிகளின் பெயர்களை, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர நாடாளுமன்றத்தில் இன்று (23) வெளியிட்டார்.
நுவரெலியா மாவட்ட மக்களுக்கு காணி இல்லாத நிலையிலேயே இவ்வாறு காணி கொள்ளை இடம்பெற்றுள்ளது என சுட்டிக்காட்டிய அவர், இது தொடர்பில் விசாரணை வேண்டும் என வலியுறுத்தினார்.
எல்.ஆர்.சியால் மாற்று காணி வழங்கப்பட்டுள்ள நபர்களின் பட்டியலில் அரசியல்வாதிகளின் பெயர் உள்ளதா என கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி நீர்பாசனம் அமைச்சரிடம் மஞ்சுள சுரவீர எம்.பி. கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு அமைச்சு தரப்பில் பிரதி அமைச்சர் பதிலளிக்கையில்,
” அரசியல்வாதிகளுக்கு ஆணைக்குழுவால் சட்டத்திற்குட்பட்ட வரையறைக்குள் காணி வழங்கப்படவில்லை.” எனக் கூறினார்.
இதனையடுத்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரவீர,
“நுவரெலியா மாவட்டத்தில் மக்களுக்கு காணி இல்லை, இந்நிலையில் பிரதி அமைச்சரால் வழங்கப்பட்ட பதில் தொடர்பில் எமக்கு பிரச்சினை உள்ளது.” என சுட்டிக்காட்டினார். அதன்பின்னர் கீழ்வரும் அரசியல் வாதிகளின் பெயர்களையும், கையகப்படுத்தப்பட்ட காணியின் அளவையும் அவர் வெளியிட்டார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ்: அம்பகமுவ, வேவல்கலாவ பிரதேசத்தில் சுமார் 50 ஏக்கர்.
உபாலி லியனகே ( தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர்) வேவல்கலாவ பிரதேசத்தில் 50 ஏக்கர்.
சுப்பையா சதாசிவம் (முன்னாள் பா.உ) கொத்மலை கிழக்கு, புரட்டொப் பிரதேசத்தில் சுமார் 16 ஏக்கர்.
ரஞ்சித் சியம்பலாபிட்டிய (முன்னாள் இராஜாங்க அமைச்சர்) தலவாக்கலையில் சுமார் 50 ஏக்கர்.
மகிந்தானந்த அளுத்கமகே (முன்னாள் அமைச்சர்) நுவரெலியா மாகஸ்தொட்ட, ஹாவெலிய, லவ்வர்ஸ்லீப் ஆகிய பிரதேசங்களில் (தலா 10 ஏக்கர் வீதம்) மொத்தமாக 30 ஏக்கர்.
இந்த பெயர் பட்டியல் உள்ள ஆவணம் எங்கே எனவும் காணி பிரதி அமைச்சரிடம் அவர் கேள்வி எழுப்பினார்.
” அந்த பட்டியல் இருக்கவில்லை. இது பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்.இது பற்றி அமைச்சுக்கு தெரியப்படுத்தப்படும்.” என பிரதி அமைச்சர் பதிலளித்தார்.
இந்த காணி கொள்ளை தொடர்பில் எப்போது விசாரணை ஆரம்பமாகும் என்ற கேள்விக்கு, இது தொடர்பில் வெளிப்படையான விசாரணையை முன்னெடுத்து, விரைவில் சபைக்கு தெரியப்படுத்தப்படும் என பிரதி அமைச்சர் பதிலளித்தார்.