நுவரெலியாவில் வாக்குகளை சிதறடிக்க சதி!

நுவரெலியா மாவட்டத்தில் முகவரி அற்றவர்கள் வாக்குகளை சிதறடிக்க பல புதிய சின்னங்களில் விதவிதமான முறையில் யுக்திகள் நடைபெற்று வருவதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல் தெரிவித்துள்ளார்.

லிந்துலை மெரயா பகுதியில் (01) வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்

” மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் உடனடியாக குரல் கொடுப்பது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மாத்திரம்தான். ஆனால் தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் 8 பேரை தெரிவு செய்வதற்கு 308 பேர் போட்டியிடுகின்றனர்.

கொழும்பு போன்ற தலைநகரங்களில் முகவர்களாக செயற்படுகின்றவர்கள் பணம் வழங்கி மலையக வாக்குகளை சிதறடிக்கின்றனர். ஆனால் தேர்தல் முடிந்தவுடன் பல கட்சிகளின் வேட்பாளர்களை காண கூட கிடைக்காது. அவர்களுக்கு என்று நிரந்தர அலுவலகம் கூட இல்லை .

அவர்களின் எண்ணங்கள் வாக்குகளை சிதறடிப்பதே , இதற்காக பல புதிய யுக்திகள் நடைபெறுகின்றன. முகவர்களாக செயற்படுகின்றவர்கள் ஒன்றை உணர வேண்டும், மலையக மக்களுக்கு இன்னமும் ஏராளமான பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. அது என்னவென்று கூட தெரியாதவர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றன இது எங்களுக்கு ஒரு நகைச்சுவையாக இருக்கின்றது.

அண்மையில் கண்டி, உன்னஸ்கிரிய பகுதியில் 14 நாட்கள் தொடர்ச்சியாக வேலைக்கு வராவிட்டால், தோட்ட லயன் குடியிருப்பு கையகப்படுத்தப்படும். தோட்டங்களில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள் என அரசாங்கத்தின் நிர்வாகத்தின்கீழ் உள்ள அரச பெருந்தோட்ட யாக்கம் தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளனர். இதுதான் புதிய ஜனாதிபதியின் மாற்றமா ?

இவ்வாறான செயற்பாடு மலையக மக்களின் இருப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது . இதனை ஜனாதிபதி தெரிந்துதான் செய்கின்றாரா இதற்கு நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை இதற்காக குரல் கொடுக்க எப்போதும் தயாராகவே உள்ளேன் எனவே, எமக்கான பிரதிநிதித்துவம் இருந்தால்தான் இவ்வாறான சவால்களை எதிர்கொள்ள முடியும்.” – என்றார்.

 

Related Articles

Latest Articles