பசறை வைத்தியசாலை செல்லும் வீதி வீதியை புனரமைத்து தருமாறு கோரிக்கை
பசறை–பதுளை பிரதான வீதியிலிருந்து பசறை வைத்தியசாலை, பாடசாலை மற்றும் பிரதேச சபைக்கு சொந்தமான நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றுக்குச் செல்லும் வீதியில் சுமார் 75 மீற்றர் தூரமான வீதி நீண்டகாலமாக குண்டும் குழியுமாக காணப்படுவதால், பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
பசறை பதுளை வீதியில் இருந்து பசறை வைத்தியசாலைக்கு செல்லும் குறித்த வீதி, தினமும் பெருமளவான நோயாளிகள் பயணிக்கின்றனர்
குறிப்பாக, பசறை வைத்தியசாலைக்கு நோயாளிகளை அழைத்துச் செல்லும் வாகனங்கள், வைத்தியசாலை ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் இந்தப் பாதையைப் பயன்படுத்துகின்றனர்.
எனினும், பசறை–பதுளை பிரதான வீதியிலிருந்து வைத்தியசாலை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் சுமார் 75 மீற்றர் தூரமான வீதிப் பகுதி நீண்டகாலமாக முறையான பராமரிப்பின்றி காணப்படுவதுடன், பல இடங்களில் குண்டும் குழிகளும் ஏற்பட்டுள்ளன.
மழைக்காலங்களில் இந்தக் குழிகளில் மழைநீர் தேங்குவதால், வீதியின் நிலைமை மேலும் மோசமடைவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், வாகனங்கள் பயணிப்பதிலும், பாதசாரிகள் நடந்து செல்வதிலும் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறிப்பாக, வைத்தியசாலைக்கு செல்லும் பிரதான வீதியாக இருப்பதால், நோயாளிகளை அழைத்துச் செல்லும் வாகனங்கள் இந்தப் பாதையைப் பயன்படுத்தும்போது அதிக சிரமங்களை எதிர்கொள்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை, இந்த வீதியின் ஊடாக பாடசாலைக்கும், பிரதேச சபைக்கு சொந்தமான நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கும் செல்ல வேண்டியுள்ளதால், மாணவர்கள், பாடசாலை சமூகத்தினர், நீர் சுத்திகரிப்பு நிலையத்துடன் தொடர்புடைய பணியாளர்கள் மற்றும் பொதுமக்களும் தினசரி இந்தப் பாதையால் பாதிக்கப்படுகின்றனர்.
நீண்டகாலமாக வீதி சேதமடைந்த நிலையில் காணப்பட்ட போதிலும், இதுவரை நிரந்தரமான புனரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, பசறை வைத்தியசாலை, பாடசாலை மற்றும் பிரதேச சபைக்கு சொந்தமான நீர் சுத்திகரிப்பு நிலையம் போன்ற முக்கிய இடங்களுக்கான அணுகுமுறை வீதியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குறித்த வீதியை நேரில் பார்வையிட்டு, குண்டும் குழிகளையும் சீரமைத்து, முறையான புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், நோயாளிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பையும், அத்தியாவசிய சேவைகளுக்கான தடையற்ற போக்குவரத்தையும் கருத்தில் கொண்டு, இந்த வீதிப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்துகின்றனர்
த.டிமேஷன்










