பசறையில் 5 வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டிருக்கும் சிறுவர் பராமரிப்பு நிலையம்

பெருந்தோட்டமொன்றில் சிறுவர் பராமரிப்பு நிலையம் மூடப்பட்டிருப்பதனால், பிள்ளைகள் இருக்கும் தாய்மார்கள் தோட்ட தொழிலுக்கு செல்லாமல், தாம் தமது குடியிறுப்புக்களில் இருந்தவாரே, தமது பிள்ளைகளை பராமரித்து வருகின்றனர்.

பசறையை அண்மித்த கமேவலை தோட்டத்திலேயே, மேற்படி நிலை இருந்து வருகின்றது.

கமேவலை தோட்டத்தில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் அத் தோட்டத்தில் சிறுவர் பராமரிப்பு நிலையம் இருந்து வந்தது. அக்காலப் பகுதியில், அச் சிறுவர் பராமரிப்பு நிலையம் 15 பிள்ளைகளுடன் சிறப்புற இயங்கி வந்தது.

அந்நிலையில், அச்சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் கடமையாற்றி வந்த பெண், பிறிதொரு தொழிலுக்கு சென்றுவிட்டதினால், சிறுவர் பராமரிப்பு நிலையம் மூடப்பட்டு விட்டது. ஐந்து வருடகாலமாகவே, இச் சிறுவர் பராமரிப்பு நிலையம் மூடிய நிலையிலேயே காணப்படுகின்றது.

இச் சிறுவர் பராமரிப்பு நிலையத்தை திறக்குமாறு, கமேவலை தோட்டத் தொழிலாளர்கள், தோட்ட நிருவாகத்திற்கு பல்வேறு கோரிக்கைகளை விடுத்தும், எவ்வித பயனும் கிடைக்கவில்லை. இந்நிலையினால், பிள்ளைகள் இருந்து வரும் தொழிலாளர் தாய்மார்கள், தொழிலுக்கு செல்வதையும் தவிர்த்து வருகின்றனர்.

தோட்டத்தில் வேலை நாட்கள் குறைப்புடன், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வினால் தத்தமது வாழ்வாதாரங்களை முன்னெடுக்க முடியாத அவலத்தையே, தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ளனர். இந் நிலையில் தமது பிள்ளைகளை பராமரிக்க குடியிறுப்புக்குள்ளேயே முடங்கியிருந்தால் தமது ஏழ்மை வாழ்வியலையாவது மேற்கொள்ள முடியாத இக்கட்டான சூழ்நிலை தமக்கேற்பட்டிருப்பதாக, பெண் தொழிலாளர்கள் பலரும் முறையிடுகின்றனர்.

இத்தோட்டத்தில் சிறுவர் பராமரிப்பு நிலையக் கட்டிடமொன்று இருந்தும், தற்போதைய நிலையில் அக்கட்டிடம் கைவிடப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது.

சிறுவர் பராமரிப்பு நிலையம் மீளவும் திறந்து செயற்படுமேயானால் 20 பிள்ளைகள் வரை, அந்நிலையத்தில் தங்க வைக்க எதிர்பார்த்திருக்கின்றோம். அச்சூழ்நிலை ஏற்பட்டால் 20 பிள்ளைகளது தாய்மார்களும் தோட்டத் தொழிலுக்கு செல்வதற்கு வாய்ப்பு ஏற்படுமென்றும் தாய்மார்கள் தெரிவிக்கின்றனர்.

அவ்வகையில் தொழிலுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படுமேயானால், எமது ஏழ்மை வாழ்வியலில் சிறிது முன்னேற்றத்தை காணக்கூடியதாக இருக்குமென்றும், அவர்கள் மேலும் கூறினர்.

தொழிலாளர்கள் விடுக்கும் இந் நியாயமான கோரிக்கைக்கு, தோட்ட நிருவாகம் செவிசாய்க்க வேண்டியது காலத்தின் அவசியத் தேவையாகும். அத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்யும் தொழிற்சங்கங்களும் இது விடயத்தில் கூடிய அக்கறை செலுத்தி, மூடப்பட்டுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தை செயற்பட வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எம். செல்வராஜ், பதுளை

Related Articles

Latest Articles