அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கையிருப்பு குறைவது தொடர்பில் இலங்கை இன்னும் சிவப்பு எச்சரிக்கை மட்டத்துக்கு வரவில்லை. எனினும், உணவு கையிருப்பு தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளது – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று நடைபெற்றது.
இதன்போது ” நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கையிருப்பு 3 மாதங்களுக்கும் குறைவாக உள்ள நிலையில், இது சிவப்பு எச்சரிக்கையாக கருதப்படுகிறது. ” என சுட்டிக்காட்டி அது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவா கூறினார்.
”நீங்கள் கூறும் ஒரு பகுதியில் உண்மை இருக்கின்றது. உணவு கையிருப்பு தொடர்பில் நாம் தீவிர கவனம் செலுத்தியுள்ளோம். அடுத்த மாதம் கடன் தவணையொன்றை செலுத்த வேண்டியுள்ளது. இதன்படி ஒரு பில்லியன் டொலர் செலுத்தப்படும். தங்கத்துடன் எம்மிடம் 4.5 பில்லியன் டொலர் கையிருப்பில் உள்ளது. எனவே, பிரச்சினை இல்லை என கூறிவிடவும் முடியாது. அவ்வாறான பிரச்சினையை தீர்த்துக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றன. பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு எதிர்ப்பார்க்கின்றோம்.
நீங்கள் கூறுவது போல் சிவப்பு எச்சரிக்கை மட்டத்தில் நாம் இல்லை என்றாலும் அந்த எச்சரிக்கையை நாம் உதாசீனப்படுத்தவில்லை. மூன்று மாதங்களுக்கான கையிருப்பு தற்போது இருக்கிறது.எனினும் தற்போதைய உலக நிலைவரத்துடன் அதனை தக்கவைத்துக்கொள்வது சவால்மிக்க விடயமாகும். எனினும், சிவப்பு எச்சரிக்கை என்ற கட்டம் வருவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.” – என்றார் அமைச்சர் கெஹலிய.
அத்துடன், உணவு தட்டுப்பாடு ஏற்படுவதை தடுப்பதற்கான அனைத்துவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
