பணத்துக்காக கொல்லப்பட்ட முதியவர் – யாழில் பயங்கரம்!

யாழ்ப்பாணம், கீரிமலையில் வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட வயோதிபர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று உடற்கூற்றுப் பரிசோதனையின் அடிப்படையில் கண்டறியப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர் .

வயோதிபரைக் கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் 42 மற்றும் 62 வயதுடைய சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் கூறினர்.

கீரிமலை, புதிய கொலனியில் வசிக்கும் ச. நடராசா ( வயது 63 ) என்பவரே கொலைசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த வயோதிபர் வீட்டில் நினைவிழந்திருந்த நிலையில் காணப்பட்டதையடுத்து தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று அறிக்கையிடப்பட்டது .

வயோதிபரின் கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்ட மூச்சுத்திணறலினால் அவர் உயிரிழந்துள்ளார் என்று சட்ட மருத்துவ அறிக்கையிடப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் இருவர் காங்கேசன்துறைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

5 ஆயிரம் ரூபா பணம் திருடப்பட்டமை தொடர்பாக எழுந்த முரண்பாடு ஒன்றை அடுத்தே இந்தக் கொலை நடந்துள்ளது என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன என்று காங்கேசன்துறைப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles