பதுளை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பசறை, கனவரல்ல மவுஸ்ஸாகலை, மடுல்சீமை, டூமோ ஆகிய பகுதிகளில் மண்சரிவு அபாயம் காரணமாக 67 குடும்பங்களைச் சேர்ந்த 201 பேர் குறித்த பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மாவட்ட அனர்த்த நிவாரண சேவை அதிகாரி சஞ்சீவ சமரகோன் தெரிவித்தார்.
இதன்படி பசறை கனவரல்ல பகுதியைச் சேர்ந்த 18 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் கனவரல்ல இலக்கம் 3 தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், மடுல்சீமை டூமோ பகுதியை சேர்ந்த 49 குடும்பங்களை சேர்ந்த 151 பேர் கல்லுல்ல தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப் பட்டுள்ளனர்.
அவர்களுக்கான உணவு, மருத்துவ வசதிகளை செய்து கொடுப்பதற்கு லுணுகலை மற்றும் பசறை பிரதேச செயலக செயலாளரின் ஆலோசனையுடன் கிராமசேவகர் மற்றும் அனர்த்த நிவாரண சேவை அதிகாரிக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மண்சரிவு அபாயம் காரணமாக தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு இரவு நேரங்களில் பாதுகாப்பிற்கு பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ராமு தனராஜா










